மாவட்ட செய்திகள்

கடலூரில் பெண்களை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது + "||" + 2 suspects arrested for jewelery extortion at Targeting women In Cuddalore

கடலூரில் பெண்களை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது

கடலூரில் பெண்களை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது
கடலூரில் பெண்களை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 37 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
கடலூர்,

கடலூரில் கடந்த வாரத்தில் நீதிமன்ற பெண் ஊழியர், துணை போலீஸ் சூப்பிரண்டு மனைவி, பொதுப்பணித்துறை பெண் ஊழியர், மூதாட்டி என 4 பேரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நகை பறிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பெண்களை குறி வைத்து நகை பறிப்பில் ஈடுபடும் கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி கடலூர் மாவட்ட டெல்டா பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான தனிப்படையினர் கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.


இந்நிலையில் கடலூர் குண்டுசாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மறித்து டெல்டா பிரிவு போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை கூறினர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் 2 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், விருத்தாசலம் அருகே சின்னகாப்பான்குளத்தை சேர்ந்த சின்னதுரை மகன் சிவராமன் (வயது 39), அரியலூர் மாவட்டம் காடுவெட்டியை சேர்ந்த ராமலிங்கம் மகன் செல்வமணி(39) என்பதும், கடலூரில் பெண்களை குறி வைத்து நகைகளை பறித்து சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் டெல்டா பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். அதன்பேரில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் அவர்கள் 2 பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர்கள் 2 பேரும் வழிப்பறி, கொள்ளை வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்துள்ளனர். அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த மாதம் 20-ந்தேதி சிவராமன் கடலூர் மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அதேபோல் செல்வமணியும் ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பிறகு 2 பேரும் சேர்ந்து கடந்த 25-ந்தேதி முதல் கடலூர் பகுதியில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர்கள் 2 பேர் மீதும் கடலூர், விழுப்புரம், சென்னை, கள்ளக்குறிச்சி, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் புதுநகர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார், 37 பவுன் நகைகளை மீட்டனர்.