திருப்பூரில் விளையாட்டு மைதானங்கள் திறக்கப்படுவது எப்போது? நடைபயிற்சிக்கு செல்பவர்கள் எதிர்பார்ப்பு
திருப்பூரில் விளையாட்டு மைதானங்கள் திறக்கப்படுவது எப்போது? என்று நடைபயிற்சிக்கு செல்பவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
திருப்பூர்,
உடலினை உறுதி செய்ய உடற்பயிற்சி அவசியம். உடல் உழைப்பு குறைந்து வரும் நிலையில் ஒவ்வொருவரும் நடைபயிற்சி செல்ல வேண்டும் என்பதே டாக்டர்களின் அறிவுரையாக இருக்கிறது. அதனால் நடைபயிற்சி செல்வோர் எண்ணிக்கை திருப்பூரில் அதிகரித்து வருகிறது. திருப்பூரில் உள்ள பள்ளி, கல்லூரி மைதானங்களில் மக்கள் காலை, மாலைநேரத்தில் நடைபயிற்சி செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
சிக்கண்ணா அரசு கல்லூரி, ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நஞ்சப்பா பள்ளி, கே.எஸ்.சி. பள்ளி, அனுப்பர்பாளையம் மாநகராட்சி பள்ளி மைதானங்களில் அதிக அளவில் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வது வாடிக்கை. அதுபோல் போக்குவரத்து அதிகம் இல்லாத ரோடுகளிலும் மக்கள் நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள்.
பஸ் போக்குவரத்து
கொரோனா ஊரடங்கு காரணமாக விளையாட்டு மைதானங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் பலர் நடைபயிற்சிக்கு செல்ல முடியாமல் தவித்தனர். வீட்டை விட்டு வெளியே வரவே அச்சமடைந்தனர். அதன்பிறகு தளர்வுகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்ட பின்னர் வீட்டு மொட்டை மாடியிலும் வீட்டுக்கு அருகில் உள்ள வீதியிலும் நடைபயிற்சி மேற்கொண்டனர்.
இப்பொழுது மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் சாலையோரங்களில் நடைபயிற்சிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. இதுவரை அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து இல்லாமல் இருந்ததால் வாகன போக்குவரத்து குறைவாக ரோடுகளில் இருந்தது. ஆனால் அரசு பஸ்கள் இயங்க தொடங்கி இருப்பதால் சாலையோரம் நடைபயிற்சி செல்லவும் தற்போது சிரமம் ஏற்பட்டுள்ளது.
திறக்கப்படுவது எப்போது?
எனவே திருப்பூர் மாநகர பகுதிகளில் உள்ள பள்ளி,கல்லூரி விளையாட்டு மைதானங்களை நடைபயிற்சிக்கு திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குழு விளையாட்டுக்கு அனுமதிக்காவிட்டாலும் பெரியவர்கள் நடைபயிற்சி செல்வதற்கு அனுமதிக்க வேண்டும். சமூக இடைவெளி விட்டு நடைபயிற்சி மேற்கொள்ள முடியும் என்றும் நடைபயிற்சி செல்பவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனவே விளையாட்டு மைதானங்கள் திறக்கப்படுவது எப்போது என்ற எதிர்பார்ப்பு பெரியவர்கள் முதல் இளைஞர்களிடம் அதிகம் ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story