ஓவேலி பேரூராட்சியில் செல்போன் அலைவரிசை சேவை கிடைக்காமல் பொதுமக்கள் அவதி
ஓவேலி பேரூராட்சியில் செல்போன் அலைவரிசை சேவை கிடைக்காமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவில் வருவாய்த்துறைக்கு அல்லது வனத்துறைக்கு என முடிவு செய்யப்படாத பிரிவு-17 வகை நிலங்கள் காணப்படுகின்றன. இங்கு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓவேலி பேரூராட்சி பகுதியில் செல்போன் அலைவரிசை சேவை வழங்குவதற்காக பி.எஸ்.என்.எல். உள்பட செல்போன் கோபுரங்கள் அமைக்க அனுமதி இல்லை.
எனினும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தனமலையில் ஜெனரேட்டர் வசதியுடன் பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டது. ஆனால் மின் இணைப்பு இல்லை. ஜெனரேட்டரில் எரிபொருள் தீர்ந்தால், கோபுரம் செயலிழந்து விடுவது வாடிக்கையாக உள்ளது.
அலைவரிசை சேவை பாதிப்பு
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓவேலி பேரூராட்சியில் பலத்த மழை பெய்தது. அப்போது பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் செயலிழந்தது. இதனால் செல்போன் அலைவரிசை சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைக்கு கூட யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதுகுறித்து ஓவேலி பேரூராட்சி மக்கள் கூறியதாவது:-
அவதி
ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான நேரங்களில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலை உள்ளது. இதனால் செல்போன் பயன்பாடு அதிகரித்து உள்ளது. மேலும் காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியாகவும் ஓவேலி விளங்குகிறது. இது தவிர பருவமழை தொடங்க உள்ளதால், பலத்த மழையும் பெய்து வருகிறது. இதுபோன்ற நேரங்களில் செல்போன் அலைவரிசை சேவை பாதிக்கப்படுவதால் மிகுந்த அவதி அடைகிறோம். எனவே பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரம் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுப்பதோடு, வருங்காலத்தில் இதுபோன்ற பிரச்சினை ஏற்படுவதை தடுக்கும் வகையில் கூடுதலாக செல்போன் கோபுரங்கள் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story