செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் சவாலாக உள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் சவாலாக உள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 6 Jun 2020 4:53 AM IST (Updated: 6 Jun 2020 4:53 AM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் சவாலாக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நோய் தொற்று தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு நோய் தடுப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சாந்தி மற்றும் சுகாதார துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

செங்கல்பட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 260-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்ட கலெக்டரின் நேர்முக கண்காணிப்பில் 2 ‘கேர் சென்டர்கள்’ அமைக்கப்பட்டு நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் சென்னைக்கு மிக அருகில் இருப்பதால் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் சவாலாக உள்ளது. இருப்பினும் தடுப்பு பணிகள் தொடர்ந்து செய்யப்படுகிறது. 50க்கும் குறைவானவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின் படியும் நோயாளிகளின் விருப்பத்தின் பேரிலும் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 35-க்கும் அதிகமான கர்ப்பிணி பெண்களுக்கும், 37 குழந்தைகளுக்கும், 8 டயாலிசிஸ் நோயாளிகளுக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. முதல் வரிசை பணியாளர்களுக்கு இது வரையிலும் நோய் தொற்று ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்றை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story