கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்சியாளர்கள் எதுவும் செய்யவில்லை; துணை சபாநாயகர் எம்.என்.ஆர். பாலன் குற்றச்சாட்டு


கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்சியாளர்கள் எதுவும் செய்யவில்லை; துணை சபாநாயகர் எம்.என்.ஆர். பாலன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 6 Jun 2020 5:31 AM IST (Updated: 6 Jun 2020 5:31 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தொற்றினால் உருவான கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்சியாளர்கள் எதுவும் செய்யவில்லை என்று துணை சபாநாயகர் எம்.என்.ஆர். பாலன் கூறினார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமியை, துணை சபாநாயகர் எம்.என்.ஆர். பாலன் சந்தித்து ஒரு மனு அளித்தார். அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

எனது தொகுதிக்குட்பட்ட திருக்குறளார் நகர், மூகாம்பிகை நகர், ஆசிரியர் காலனி ஆகிய பகுதிகள் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதி மக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொள்ளாமல் இதுபோல் அறிவித்து விடுகிறார்கள். அதைத்தவிர வேறு எதையும் அங்கு செய்வதில்லை. இதுதொடர்பாக முதல்-அமைச்சரிடம் ஏற்கனவே கூறியுள்ளேன். மக்களின் உணர்வுகளை தேவைகளை புரிந்து கொள்ளுங்கள். மக்களின் வாழ்வாதாரத்திற்கு முயற்சி எடுங்கள் என்று பலமுறை கேட்டுள்ளேன்.

தமிழகத்தில் தனிமைப்படுத்துதல் 14 நாட்களாக உள்ளது. ஆனால் இங்கு 28 நாட்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. அந்த பகுதியில் உள்ள மக்களின் உணவுக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறி உள்ளேன். இதை ஆட்சியாளர்கள் தான் செய்ய வேண்டும்.

நான் எனது சொந்த பணத்தில் ரூ.30 லட்சம் செலவிட்டு உள்ளேன். அரசு என்ன செய்தது. இந்த அரசின் செயல்பாட்டில் எனக்கு அதிர்ச்சி உள்ளது. ஆனால் இது ஆட்சிக்கும், கட்சிக்கும் எதிரானது அல்ல. இதை எனது தலைமைக்கு தெரிவித்துவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story