பிரசவமான சிறிது நேரத்தில் பெண் திடீர் சாவு; குழந்தையும் இறந்த பரிதாபம்


பிரசவமான சிறிது நேரத்தில் பெண் திடீர் சாவு; குழந்தையும் இறந்த பரிதாபம்
x
தினத்தந்தி 6 Jun 2020 6:43 AM IST (Updated: 6 Jun 2020 6:43 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை அருகே பிரசவமான சிறிது நேரத்தில் பெண் திடீரென இறந்தார். குழந்தையும் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி பிரியா (வயது 28). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. பிரியா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டதால் பிரியா ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு உடல் நிலை மோசமானதால் அவரை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். பர்கூர் அருகே உள்ள ஜெகதேவி அருகில் வந்த போது ஆம்புலன்சிலேயே பிரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் சிறிது நேரத்தில் பிரியாவிற்கு வலிப்பு வந்து பரிதாபமாக இறந்தார்.

அதேபோல குழந்தையும் பிறந்த சிறிது நேரத்தில் இறந்து விட்டது. இது தொடர்பாக ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று தாய், சேய் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாய், சேய் இறந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரசவமான சிறிது நேரத்தில் பெண் மற்றும் குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story