குமரி மாவட்டத்தில் தேனீ விவசாயிகளுடன் செல்போனில் அதிகாரிகள் கலந்துரையாடல்


குமரி மாவட்டத்தில் தேனீ விவசாயிகளுடன் செல்போனில் அதிகாரிகள் கலந்துரையாடல்
x
தினத்தந்தி 6 Jun 2020 7:39 AM IST (Updated: 6 Jun 2020 7:39 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செல்போன் மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சியை வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை இணைந்து நடத்தின.

நாகர்கோவில், 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செல்போன் மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சியை வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை இணைந்து நடத்தின. வேளாண் அறிவியல் நிலைய உதவிப்பேராசிரியை லதா தேனீ வளர்ப்பு குறித்து கலந்துரையாடினார். 

அவர் பேசும் போது குமரி மாவட்டம் தேனீ வளர்ப்புக்கு உகந்த கால நிலைகளை கொண்டுள்ளது. பாரம்பரியமாக பல விவசாயிகள் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். தேனீ உற்பத்தி செய்யும் மாவட்டங்களில் கன்னியாகுமரி முதன்மையானதாக திகழ்கிறது. தேனீ வளர்க்கும் தோட்டங்களில் மகரந்த சேர்க்கை அதிகமாக நடை பெறுவதால் விவசாய மகசூல் அதிகரிக்கிறது. தேனீ வளர்ப்பு தொழிலில் அனைத்து தரப்பினரும் ஈடு படலாம், குறிப்பாக பெண்கள் முறையான பயிற்சி எடுத்து இதில் ஈடு படலாம் என கூறினார். 

தேனுக்கு அதிக தேவையும் அதில் அதிக மருத்துவ குணங்கள் இருப்பதால் சந்தை படுத்துதலில் எந்த பிரச்சினையும் இல்லை. எனவே அனைத்து விவசாயிகளும் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் தேன் வளர்க்கும் தொழில் நுட்பங்களை விளக்கி கூறினார். 

பின்னர் விவசாயிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். வேளாண் அதிகாரி சுரேஷ் தேனீ வளர்ப்பு திட்டங்கள் குறித்து விளக்கினார். மேலும் தேனீ வளர்ப்பில் குழுவாக இணைந்து செயல் படுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் அதற்கான வழிமுறைகள் குறித்து தெளிவு படுத்தினார். இதற்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் மேலாளர் ஆண்டனி எட்வர்ட் சிங் மற்றும் முன்னோடி விவசாயிகள் செய்திருந்தனர்.

Next Story