கள்ளக்குறிச்சியில் 12 பேருக்கு கொரோனா


கள்ளக்குறிச்சியில் 12 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 Jun 2020 9:26 AM IST (Updated: 6 Jun 2020 9:26 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் 12 பேருக்கும், விழுப்புரத்தில் 7 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 254 ஆக இருந்தது. இதில் 153 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு சென்றவர்கள் தற்போது அதிகளவில் திரும்பி வந்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 5 சோதனை சாவடிகளில் கண்டறியப்பட்டு சிறப்பு மருத்துவ வசதிகளுடன் கூடிய 12 கொரோனா தடுப்பு கண்காணிப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று 130 பேரின் பரிசோதனை முடிவுகள் வந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கொரோனா பாதித்தவர்களின் தொடர்பில் இருந்த 8 பேர் மற்றும் மராட்டியத்தில் இருந்து வந்த 4 பேர் என ஒரே நாளில் 12 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 266 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரஸ் நோயால் 356 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஏற்கனவே 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ள நிலையில் 321 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 33 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று சிலரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளின் முடிவுகள் வந்தது. இதில் மேலும் 7 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் விழுப்புரம் அருகே அன்னியூரை சேர்ந்த 63 வயதுடைய மூதாட்டியும், அவரது பேரனான 17 வயதுடைய சிறுவனும், விக்கிரவாண்டி அருகே வீடூரை சேர்ந்த 36 வயதுடைய ஆண் ஒருவரும், திண்டிவனம் அருகே கம்பூரை சேர்ந்த 60 வயதுடைய மூதாட்டியும், 70 வயதுடைய அவரது கணவரும், மேல்மலையனூர் அருகே கடலிப்புதூரை சேர்ந்த 18 வயதுடைய வாலிபர் ஒருவரும், விழுப்புரம் அருகே மாத்தூரை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் கம்பூரை சேர்ந்த வயதான தம்பதியினர் சென்னையில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்தவர்கள், கடலிப்புதூர், மாத்தூரை சேர்ந்தவர்கள் சென்னையில் இருந்து திரும்பி வந்தவர்கள், வீடூரை சேர்ந்தவர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் ஆவார்.

இதையடுத்து அவர்கள் 7 பேரும் விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் 7 பேரையும் டாக்டர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.தொடர்ந்து, இவர்கள் வசித்து வரும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள பிரதான சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 363 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்த 627 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டும், கொரோனா முன்னெச்சரிக்கை தொடர்பாக 432 பேர் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story