வீட்டு முன்பு கோலம் போட்ட போது பெண்ணின் வாயை பொத்தி 3 பவுன் நகை பறிப்பு மர்ம ஆசாமிகள் கைவரிசை


வீட்டு முன்பு கோலம் போட்ட போது பெண்ணின் வாயை பொத்தி 3 பவுன் நகை பறிப்பு மர்ம ஆசாமிகள் கைவரிசை
x
தினத்தந்தி 6 Jun 2020 9:43 AM IST (Updated: 6 Jun 2020 9:43 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் வீட்டு முன்பு கோலம்போட்ட பெண்ணின் வாயை பொத்தி 3 பவுன் நகையை 2 ஆசாமிகள் பறித்து சென்றனர்.

திருச்சி, 

திருச்சியில் வீட்டு முன்பு கோலம்போட்ட பெண்ணின் வாயை பொத்தி 3 பவுன் நகையை 2 ஆசாமிகள் பறித்து சென்றனர்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

வாயை பொத்தி நகை பறிப்பு

திருச்சி தென்னூர் அண்ணாநகர் முதல் தெருவை சேர்ந்த சீனிவாசனின் மனைவி புவனேஸ்வரி(வயது 52), நேற்று அதிகாலை தனது வீட்டின் முன் கோலம் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 2 மர்ம ஆசாமிகள் புவனேஸ்வரியின் வாயை பொத்தியதுடன், கத்தியை காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 3 பவுன் வளையல்களை பறித்தனர். பின்னர், கண் இமைக்கும் நேரத்தில் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தில்லை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணம் ஆகாத ஏக்கத்தில் பெண் தற்கொலை

* திருச்சி கிராப்பட்டி அன்புநகரை சேர்ந்தவர் சரண்யாதேவி(30). இவருக்கு பல இடங்களில் பெற்றோர் மாப்பிள்ளை பார்த்தும், திருமணம் கைகூடவில்லை. இதனால் திருமணம் ஆகாத ஏக்கத்தில், சரண்யாதேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

* திருச்சி வரகனேரியை சேர்ந்த பழவியாபாரி கார்த்திக்(34) காந்தி மார்க்கெட் பகுதியில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது, அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்து சென்றதாக அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமாரை(20) காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர்.

சமையல்காரர் மர்ம சாவு

* திருச்சி சவுராஸ்டிரா தெருவை சேர்ந்தவர் சமையல்காரர் ஜீவானந்தம் (52). தனியாக வசித்து வந்த இவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் ஆனதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

* திருச்சி தென்னூர் ஆழ்வார்தோப்பு மில்லத் நகரில் உள்ள பெண்ணை கிண்டல் செய்ததாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் ஷேக் அப்துல்லா(25), அஜ்மீர் காஜா(28), அன்சாரி (25) மற்றும் பைசல்(27) ஆகிய 4 பேரை தில்லைநகர் போலீசார் கைது செய்தனர்.

மணல் கடத்திய 4 பேர் கைது

* லால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் இருந்து சரக்கு வேனில் மணல் கடத்தியதாக தண்டாங்கோரை பகுதியைச் சேர்ந்த முருகேசன் (54), திருமுருகன்(24), ஜார்ஜ்(24), ஜெய்சங்கர்(23) ஆகியோரை லால்குடி போலீசார் கைது செய்தனர். மேலும் சரக்கு வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.

விவசாயி கைது

* பாலகிருஷ்ணம்பட்டியை சேர்ந்த விவசாயி பழனிவேல்(75) வீட்டில் இருந்த நடைபாதை ஆக்கிரமிப்பை பேரூராட்சி நிர்வாகம் அகற்றியது. இதுதொடர்பாக பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்று அங்கிருந்த இளநிலை உதவியாளர் செல்வகுமாரை தகாதவார்த்தைகளால் திட்டி தாக்க முயன்றதாக பழனிவேலை உப்பிலியபுரம் போலீசார் கைது செய்தனர்.

23 பவுன் நகை மாயம்

* திருச்சி ஏர்போர்ட் கலைவாணர் தெருவை சேர்ந்தவர் ஜெராக்ஸ் கடை உரிமையாளர் மணிமாறன். இவருடைய மனைவி சித்ரா(44). சம்பவத்தன்று இவருடைய வீட்டு பீரோவில் இருந்த 23 பவுன் நகை மாயமானது. இதுகுறித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

* வையம்பட்டியை அடுத்த மண்பத்தை பகுதியை சேர்ந்த அந்தோணியம்மாள்(50) வையம்பட்டியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் ரூ.500 எடுத்துவிட்டு வந்த போது, அந்த பணத்தை பறித்ததாக திண்டுக்கல் நெட்டுத்தெருவை சேர்ந்த கார்த்தியை(24) வையம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

30 கடைகள்

* உப்பிலியபுரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள கடைகளில் உப்பிலியபுரம் போலீசார் நடத்திய சோதனையில் 30 மளிகை கடைகளில் எலிகளை கொல்லும் பசை விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர்.

பிளஸ்-2 மாணவி மாயம்

* திருச்சி இ.பி.ரோடு பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி கடந்த 2-ந் தேதி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். மறுநாள் காலையில் அவருடைய பெற்றோர் எழுந்து பார்த்த போது அவர் மாயமாகி இருந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடிவருகிறார்கள்.

Next Story