ராமேசுவரத்தில் திருட்டு வாகனங்கள் பறிமுதல்; 4 பேர் கைது
ராமேசுவரம் பகுதியில் வாகன சோதனையின்போது திருட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் பகுதியில் கார், மோட்டார் சைக்கிள்கள் உள்பட ஏராளமான திருட்டு வாகனங்கள் புழக்கத்தில் உள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து வாகன சோதனையை தீவிரப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செம்மமடம் அருகே போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்தி நிறுத்தியபோது அந்த கார் நிற்காமல் சென்றதால் அதன் பதிவு எண்ணை குறித்து வைத்து அபராதம் விதித்தனர்.
இதுபற்றிய குறுஞ்செய்தி வாகனத்தின் உரிமையாளருக்கு அனுப்பப்பட்டது. அப்போது அந்த குறுஞ்செய்தி கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சென்றுள்ளனர். இதைக்கண்ட அவர் காணாமல் போன தனது வாகனம் ராமேசுவரம் பகுதி சென்றுள்ளதை அறிந்ததும் உடனடியாக கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று தகவல் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாகன சோதனையை மேலும் தீவிரப்படுத்திய போலீசார் உயர் ரகத்தை சேர்ந்த 22 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல்
இதுகுறித்து விசாரித்த போது சென்னை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வாகனங்களை போலி ஆவணங்கள் மூலம் இப்பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக ராமேசுவரம் திட்டகுடி தெருவை சேர்ந்த எடிசன், ஞானசிங்துரை, திசையன்விளை பகுதியை சேர்ந்த எபினேசர், அஜய் சர்மா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதேபோல கடந்த மாதம் பாம்பன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது திண்டுக்கல் பகுதியை சேர்ந்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த நபர்களை பிடித்து விசாரித்ததில் 33 மோட்டார் சைக்கிள்கள் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. ராமேசுவரம் பகுதியில் இன்னும் பல வாகனங்கள் இதேபோன்று இருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
Related Tags :
Next Story