ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்தில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கும் பணிகள் தீவிரம்
ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் நேதாஜி காய்கறி, பழங்கள் சந்தை இயங்கி வந்தது. கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டு விடாமல் தடுக்க, அந்த சந்தை ஈரோடு பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
ஈரோடு,
பஸ் நிலையத்தில் தற்போது போக்குவரத்து தொடங்கி விட்டதால், பஸ் நிலையத்தில் சந்தை நடைபெறுவது மிகவும் சிரமமாக உள்ளது. இந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில் முன்கூட்டியே ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்தில் தற்காலிக சந்தை அமைப்பது என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி பணிகள் தொடங்கின.
400 கடைகள், தக்காளி, வெங்காயம் மற்றும் பழங்கள் கிடங்குகளுடன் இந்த தற்காலிக சந்தை அமைக்கப்படுகிறது. பணிகள் முடிந்து கடந்த மாதம் 26-ந் தேதி சந்தை இங்கு செயல்பட தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இன்னும் பணிகள் முடியவில்லை. இதனால், பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் சந்தை இயங்கி வருகிறது.
வ.உ.சி.பூங்கா மைதானம் தற்காலிக சந்தையில் கடைகளுக்கான இடைச்சுவர்கள் கட்டும் பணிகள் நேற்று தீவிரமாக நடந்தது. மேற்கூரைகள் அமைக்க கம்பிகளால் ஆன கட்டுமான பணிகள் செய்யப்பட்டு உள்ளன.
மேலும், அனைத்து கடைகளுக்கும் மின்சார வசதி, சந்தையில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளும் செய்யப்பட உள்ளன. இந்த பணிகள் முடிந்து இன்னும் ஒரு வார காலத்தில் சந்தை புதிய இடத்தில் தற்காலிகமாக செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story