திருப்பூரில் இருந்து ஜார்கண்டிற்கு சிறப்பு ரெயிலில் 1,600 தொழிலாளர்கள் பயணம்


திருப்பூரில் இருந்து ஜார்கண்டிற்கு  சிறப்பு ரெயிலில் 1,600 தொழிலாளர்கள் பயணம்
x
தினத்தந்தி 6 Jun 2020 11:12 AM IST (Updated: 6 Jun 2020 11:12 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்திற்கு ஒரு சிறப்பு ரெயில் சென்றது. இதில் 1,600 தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

திருப்பூர்,

பனியன் நகரான திருப்பூரில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அனைத்து பனியன் நிறுவனங்களும் மூடப்பட்டன.

தற்போது கடந்த மாதம் முதல் படிப்படியாக திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரெயிலில் சொந்த ஊருக்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் உள்ள வடமாநில தொழிலாளர்களின் ஆதார் எண்ணை வருவாய்த்துறையினர் பதிவு செய்து கொண்டு அந்தந்த மாநிலங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று திருப்பூரில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திற்கு ஒரு சிறப்பு ரெயில் சென்றது. இதில் 1,600 தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். முன்னதாக திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கி ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டனர்.

Next Story