சமூக இடைவெளியை மறந்து முக கவசம் இன்றி கடைகள், மருத்துவமனைக்கு செல்லும் மக்கள்


சமூக இடைவெளியை மறந்து முக கவசம் இன்றி கடைகள், மருத்துவமனைக்கு செல்லும் மக்கள்
x
தினத்தந்தி 7 Jun 2020 3:34 AM IST (Updated: 7 Jun 2020 3:34 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் சமூக இடைவெளியை மறந்து, முக கவசம் இன்றி கடைகள், மருத்துவமனைக்கு மக்கள் செல்கின்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் சமூக இடைவெளியை மறந்து, முக கவசம் இன்றி கடைகள், மருத்துவமனைக்கு மக்கள் செல்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மக்கள் அலட்சியம்

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டதால் கடைகள் எல்லாம் திறக்கப்பட்டுள்ளன. தளர்வு ஏற்படுத்தப்பட்டாலும் மக்கள் தாங்களாகவே முன்வந்து முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.

சமூக இடைவெளியை கடைபிடிப்பதுடன் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி இருந்தும் மக்கள், மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை அலட்சியப்படுத்தியதுடன் வீதிகளில் முக கவசம் அணியாமல் சர்வ சாதாரணமாக வலம் வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவினால் அடுத்ததாக வரக்கூடிய ஆபத்தை பற்றி உணராமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.

ரேஷன் கடைகள்

தஞ்சை நகரில் கடைகளுக்கு செல்பவர்கள் பெரும்பாலானோர் முக கவசம் அணிவதில்லை. கடை உரிமையாளர்களும் முக கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்துவது இல்லை. கை கழுவ சோப்பு, தண்ணீர் போன்ற வசதிகளும் பெரும்பாலான கடைகளில் செய்து வைக்கவில்லை.

கொரோனா வைரஸ் பற்றி எந்த கவலையும் இன்றி அலட்சியமாக இருசக்கர வாகனங்களில் 3 பேர் வரை பயணம் செய்கின்றனர். அதுவும் முக கவசம் அணிய அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனை

மக்கள் ஒரே நேரத்தில் கூடுவதை தவிர்க்க டோக்கன் வழங்கி, குறிப்பிட்ட நாட்களில் வர சொல்லி அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் பெரும்பாலான ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஒருவரையொருவர் இடித்து கொண்டு வரிசையில் நின்று பொருட்களை வாங்கி செல்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் முக கவசம் அணியாமல் வந்து செல்கின்றனர்.

தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பிரசவம் பார்க்கப்படுகிறது. தஞ்சை மட்டுமின்றி திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக வந்து செல்கின்றனர். கொரோனா பீதி காரணமாக கர்ப்பிணிகளுடன் வரும் உறவினர்களில் யாராவது ஒருவரை மட்டுமே மருத்துவமனைக்குள் அனுமதிப்படுகின்றனர்.

கொரோனா பரவ வாய்ப்பு

இதனால் மற்றவர்கள் மருத்துவமனைக்கு வெளியே காத்து இருக்கின்றனர். இப்படி காத்திருப்பவர்களின் வசதிக்காக மருத்துவமனையின் முன்பு பந்தல் போடப்பட்டு இருந்தது. ஆனால் போக்குவரத்து தொடங்கியதை தொடர்ந்து இந்த பந்தல் அகற்றப்பட்டுள்ளது. இதனால் கர்ப்பிணிகளுடன் வந்த உறவினர்கள் மருத்துவமனையின் முன்பக்க கேட் முன்பு கூடி நிற்கின்றனர்.

இவர்களில் பலர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் நிற்கின்றனர். பல மாவட்டங்களில் இருந்து வரக்கூடியவர்கள் இப்படி சமூக இடைவெளி இன்றி நெருக்கமாக நிற்பதால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடிக்க அனைவரும் முன்வர வேண்டும். முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பொருட்கள் வழங்க மாட்டோம் என கடை உரிமையாளர்கள் அறிவிக்க வேண்டும்.

எதிர்பார்ப்பு

மக்கள் தாங்களாகவே முன்வந்து முக கவசம் அணிதல், கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவற்றை செய்தால் மட்டுமே கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த வேண்டும். எனவே மக்கள் இதை கடைபிடிக்க வேண்டும். அதிகாரிகள் இதை கண்காணிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.

Next Story