தஞ்சையில் அழிந்து வரும் குருவிகளை காக்க செயற்கைக்கூடுகள் அரசு அலுவலக வளாகங்களில் அமைக்கும் தன்னார்வ இளைஞர்கள்


தஞ்சையில் அழிந்து வரும் குருவிகளை காக்க செயற்கைக்கூடுகள் அரசு அலுவலக வளாகங்களில் அமைக்கும் தன்னார்வ இளைஞர்கள்
x
தினத்தந்தி 7 Jun 2020 3:38 AM IST (Updated: 7 Jun 2020 3:38 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் அழிந்து வரும் குருவிகளை காக்க செயற்கைக்கூடுகளை அரசு அலுவலக வளாகங்களில் தன்னார்வ இளைஞர்கள் அமைத்து வருகின்றனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் அழிந்து வரும் குருவிகளை காக்க செயற்கைக்கூடுகளை அரசு அலுவலக வளாகங்களில் தன்னார்வ இளைஞர்கள் அமைத்து வருகின்றனர்.

சிட்டுக்குருவிகள்

பறவைகள் என்றாலே அழகு தான். அதுவும் சிட்டுக்குருவிகள் மனிதனின் இருப்பிடத்திலேயே கூடு கட்டி வாழ்வதால் அவை மனதுக்கு இன்னும் நெருக்கமானவை. அப்படியான சிட்டுக்குருவிகள் நம்மிடையே இருந்து விலகி வெகுதூரம் சென்று விட்டன. சிட்டுக்குருவிகள் பயிர்களில் தீமை விளைவிக்கக்கூடிய பூச்சிகளை உண்டு விவசாயத்துக்கு நன்மை செய்யக்கூடியவை.

பெயருக்கு ஏற்றாற்போல் சிறிய உடலமைப்புடன் காணப்படும் பறவை இனம். முன்பு நகரம், கிராமம் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா இடங்களிலும் காணப்பட்டன. தற்போது நகரங்களில் காணப்படுவது அரிதாகி விட்டது.

சிட்டுக்குருவிகள் பொதுவாக மக்கள் வசிக்கும் இடங்களில் தான் வாழ விரும்புகின்றன. உதாரணமாக வீட்டு மாடங்கள், கதவின் முன்புறம் என சிறிய இடங்களில் கூடுகட்டி வாழ்ந்து வந்தன இந்த சின்ன பறவைகள். ஆனால் தற்போது வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி அடுக்குமாடி குடியிருப்புகள், குளிரூட்டப்பட்ட வீடுகள் என அமைக்கப்பட்டதால் குருவிகள் கூடுகட்டி வாழ முடியாமல் போனது.

செயற்கைக்கூடுகள்

நகரங்களில் வாழ்வதற்கு தகுந்த போதுமான சூழல் அமையாமல் போவதால் சிட்டுக்குருவிகள் தகுந்த வாழ்க்கை அமையும் கிராமங்களை தேடி செல்கின்றன. இந்த இடபெயர்வில் சில பறவை இறந்து விடவும் வாய்ப்பு உள்ளது. இந்த இனம் அழிந்துவரும் நிலை ஏற்பட்டுவிட்டாலும் அதை காக்க பல தன்னார்வலர்கள் இன்றும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். தஞ்சை அருகானுயிர் காப்பு மற்றும் சூற்றுச்சூழல் அறக்கட்டளையை சேர்ந்த 10 தன்னார்வ இளைஞர்கள் தங்களது சொந்த செலவில் செயற்கைக்கூடுகளை தயாரித்து வருகின்றனர்.

சிட்டுக்குருவிகளை காக்கும் விதமாகவும், அவற்றுக்கு வாழ்விடம் ஏற்படும் வகையிலும் செயற்கைக்கூடுகள் அமைக்கும் பணியில் முழு வீச்சில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி செய்யப்படும் கூடுகளை அரசு அலுவலக வளாகத்தில் உள்ள மரங்களில் பொருத்தி வருகின்றனர். தஞ்சை பழைய கலெக்டர் அலுவலகம், புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் தலா 10 கூடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணியை தொடங்கி 3 ஆண்டுகளை கடந்து 4 ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளனர்.

500 கூடுகள்

இது குறித்து அறக்கட்டளை நிறுவனர் சதீஷ்குமார் கூறும்போது, தஞ்சை மற்றும் சுற்றுப்பகுதிகளில் சிட்டுக்குருவி, தவிட்டுக்குருவி, கொண்டைக்குருவி போன்றவை அதிகமாக காணப்படுகின்றன. இவைகள் வாழ்வதற்கு ஏற்ப கூடுகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

ஆண்டுதோறும் 200 கூடுகள் வரை செய்து வந்தோம். இந்த ஆண்டு 500 கூடுகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். முதல்கட்டமாக அரசு அலுவலக வளாகத்தில் செயற்கை கூடுகள் அமைத்து வருகிறோம். பெரும்பாலும் மரங்களில் இந்த கூடுகள் வைக்கப்படுகின்றன. மற்ற அரசு அலுவலக வளாகங்களில் வைக்கப்பட்ட பிறகு ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள முக்கிய சாலைகளில் அமைக்க இருக்கிறோம். ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் செய்து வைக்கலாம் என்றார்.

Next Story