கோவை முத்தண்ணன் குளக்கரையில் 992 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


கோவை முத்தண்ணன் குளக்கரையில் 992 ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 7 Jun 2020 5:28 AM IST (Updated: 7 Jun 2020 5:28 AM IST)
t-max-icont-min-icon

கோவை முத்தண்ணன் குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 992 வீடுகள் நேற்று இடித்து அகற்றப்பட்டன.

கோவை,

கோவை முத்தண்ணன் குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 992 வீடுகள் நேற்று இடித்து அகற்றப்பட்டன.

முத்தண்ணன் குளக்கரை

கோவையில் உள்ள முத்தண்ணன் குளக்கரையில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. குளக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட அந்த வீடுகளில் ஏராளமானவர்கள் வசித்து வந்தனர். இந்த குளக்கரை பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட உள்ளன. மேலும் குளக்கரையில் வசிப்பவர்களை காலி செய்து அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து அங்குள்ள வீடுகளை காலி செய்யுமாறு அதில் வசித்தவர்களுக்கு நோட்டீசுகள் வழங்கப்பட்டன. மேலும் அங்கு வசித்தவர்களுக்கு மலுமிச்சம்பட்டி, கீரணத்தம், சத்தி சாலையில் உள்ள காபிக்கடை ஆகிய பகுதிகளில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டு டோக்கனும் வழங்கப்பட்டன.

992 வீடுகள் இடிக்கப்பட்டன

அதன்படி 992 பேர் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு அரசு ஒதுக்கிய வீடுகளுக்கு சென்று விட்டனர். மேலும் சிலர் வீடுகளை காலி செய்யாமல் அங்கேயே குடியிருந்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலி செய்யப்பட்ட வீடுகளுக்கு பெயிண்டு அடிக்கப்பட்டு குறியிடப்பட்டு இடிப்பதற்கு தயாராக வைக்கப்பட்டது.இந்த நிலையில் கோவை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பொக்லைன் மூலம் முத்தண்ணன் குளக்கரைக்கு நேற்றுக்காலை சென்றனர். அங்கு ஏற்கனவே காலி செய்யப்பட்ட 992 வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினார்கள். அப்போது இதுவரை காலி செய்யாமல் இருந்த சிலர் மாநகராட்சி அதிகாரிகளிடம் வந்து எங்கள் வீடுகளை இடிக்க விடமாட்டோம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் காலியான வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.

Next Story