மாநிலங்களவை தேர்தல்: மல்லிகார்ஜுன கார்கே நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி


மாநிலங்களவை தேர்தல்: மல்லிகார்ஜுன கார்கே நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 7 Jun 2020 5:52 AM IST (Updated: 7 Jun 2020 5:52 AM IST)
t-max-icont-min-icon

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே நாளை (திங்கட்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் கர்நாடக காங்கிரஸ் தலைவராக பதவி ஏற்கும் நிகழ்ச்சி வருகிற 14-ந் தேதி நடத்த முடிவு செய்துள்ளேன். அதற்கு அனுமதி வழங்குமாறு தலைமை செயலாளர் மற்றும் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனரின் அனுமதியை கேட்டுள்ளேன். வருகிற 8-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. அதனால் எனது நிகழ்ச்சிக்கு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இதுவரை கர்நாடக அரசு எந்த பதிலையும் கூறவில்லை. ஒருவேளை அனுமதியை நிராகரித்தால், காணொலி கட்சி மூலம் பதவி ஏற்கும் நிகழ்ச்சியை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். மாநிலங்களவை தேர்தலில் எங்கள் கட்சி சார்பில் மல்லிகார்ஜுன கார்கே போட்டியிடுகிறார். அவர் வருகிற 8-ந் தேதி (நாளை) வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

அவர் மனு தாக்கல் செய்யும்போது, தொண்டர்கள் யாரும் வரக்கூடாது. அவர் வெற்றி பெற்ற பிறகு தொண்டர்கள் வந்து வாழ்த்து தெரிவிக்கலாம். மனு தாக்கலின்போது அதிக எண்ணிக்கையில் கட்சியினர் வந்தால், தனிமனித விலகலை பின்பற்றுவது கடினமாகிவிடும். அதனால் மல்லிகார்ஜுன கார்கேவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் நிலை உண்டாகும். இதை தொண்டர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாக்களிக்கும் எம்.எல்.ஏ.க்கள் தவிர்த்து பிற எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பது குறித்து எங்கள் கட்சியின் மேலிட தலைவர்கள் உத்தரவிடுவார்கள். அதன்படி நாங்கள் நடப்போம். மைசுகர் சர்க்கரை ஆலைக்கும், மண்டியாவுக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பு உள்ளது. அதை தனியாருக்கு விற்கும் அரசு திட்டமிட்டுள்ளது சரியல்ல.

அந்த சர்க்கரை ஆலைக்கு அதிகளவில் சொத்துகள் உள்ளன. அந்த சர்க்கரை ஆலையை நடத்த முடியவில்லை என்று அரசு சொல்லட்டும், நாங்கள் ஆலோசனை வழங்க தயாராக உள்ளோம். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story