வன விலங்குகளை கொல்லும் நாட்டு வெடிகளை தயாரித்தால் கடும் நடவடிக்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
வனவிலங்குகளை கொல்லும் நாட்டுவெடிகளை தயாரிப்பவர்கள் மீது வெடிபொருள் சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் எச்சரித்துள்ளார்.
கோவை,
வனவிலங்குகளை கொல்லும் நாட்டுவெடிகளை தயாரிப்பவர்கள் மீது வெடிபொருள் சட்டத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் எச்சரித்துள்ளார்.
கேரள சம்பவம்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அம்பலப்பாறா வனப்பகுதியில், காட்டுப்பன்றிகளை விரட்ட ஒரு விவசாயி அன்னாசி பழத்துக்குள் அவுட்டுகாய் (நாட்டுவெடியை) வைத்தார். இதனை அந்த பகுதியில் சுற்றித்திரிந்த கர்ப்பிணி யானை தின்றது. அப்போது நாட்டுவெடி வெடித்ததில் படுகாயம் அடைந்து யானையும், வயிற்றுக்குள் இருந்த குட்டி யானையும் பரிதாபமாக இறந்தன. இந்த பரிதாப சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற நாட்டு வெடிகள் கோவை மாவட்டத்திலும் தயாரிக்கப்பட்டு வனவிலங்குகளை கொல்ல பயன்படுத்தப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
8 யானைகள் பலி
கோவை மாவட்டத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தும் காட்டுப்பன்றிகளை அழிப்பதற்காக சிலர் அவுட்டுகாயை பழங்களுக்குள் வைக்கிறார்கள். அதனை தின்னும் காட்டுப்பன்றிகள் வெடித்து இறந்து விடுகின்றன. பழங்கள் என்று தின்னும் காட்டு யானைகளும் நாட்டுவெடி வெடித்து இறந்து விடுகிறது.
கோவை சின்னதடாகம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் குட்டியானை உள்பட 8 யானைகள் கடந்த 5 வருடங்களில் இறந்துள்ளதாக வன விலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் தெரிவித்தனர். கோவை, பெரியநாயக்கன்பாளையம், சிறுமுகை, மேட்டுப்பாளையம், அன்னூர் பகுதிகளில் நாட்டுவெடி என்ற அவுட்டுகாய் தயாரித்து வனப்பகுதிகளில் வைத்து வருகிறார்கள்.கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் காட்டுப்பன்றிகளை வேட்டையாட முயன்ற 2 பேரை பெரியநாயக்கன்பாளையம் வன அதிகாரிகள் கைது செய்து நாட்டு வெடிகளை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் நாட்டுவெடி தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடும் நடவடிக்கை
இது குறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டுவெடி தயாரித்து வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது வனத்துறையினருடன் இணைந்து கோவை மாவட்ட போலீஸ் நடவடிக்கை எடுக்கும். குறிப்பாக பெரியநாயக்கன்பாளையம், சிறுமுகை, மேட்டுப்பாளையம், அன்னூர், தடாகம் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.வனவிலங்குகளை கொல்லும் நாட்டுவெடிகளை தயாரிப்பவர்கள் மற்றும் அதை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story