கார் டிரைவர் கொலையில் சிக்கிய கூலிப்படை தலைவன், கூட்டாளிக்கு கை, கால் முறிவு போலீசாரிடம் இருந்து தப்பிய போது தவறி விழுந்தனர்


கார் டிரைவர் கொலையில் சிக்கிய கூலிப்படை தலைவன், கூட்டாளிக்கு கை, கால் முறிவு போலீசாரிடம் இருந்து தப்பிய போது தவறி விழுந்தனர்
x
தினத்தந்தி 7 Jun 2020 8:36 AM IST (Updated: 7 Jun 2020 8:36 AM IST)
t-max-icont-min-icon

கார் டிரைவர் கொலை வழக்கில் சிக்கிய கூலிப்படை தலைவன், கூட்டாளி ஆகியோர் போலீசாரிடம் இருந்து தப்பிய போது தவறி விழுந்தனர். இதனால் அவர்களது கை, கால் முறிந்தது.

சேலம், 

கார் டிரைவர் கொலை வழக்கில் சிக்கிய கூலிப்படை தலைவன், கூட்டாளி ஆகியோர் போலீசாரிடம் இருந்து தப்பிய போது தவறி விழுந்தனர். இதனால் அவர்களது கை, கால் முறிந்தது.

கார் டிரைவர் கொலை

சேலம் சூரமங்கலம் போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் காரில் வந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் ஆடுதுறையை சேர்ந்த விமல்ராஜ் (வயது 33), கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த குமார்(30), சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்த பாலாஜி, ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் போலீசாரிடம் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இவர்கள் பல கொள்ளை மற்றும் கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும், குறிப்பாக விமல்ராஜ் கூலிப்படை தலைவனாக செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே, விமல்ராஜ் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மேட்டுப்பாளையம் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த கார் டிரைவர் சண்முகசுந்தரம் என்பவரை காரில் கடத்தி வந்து சேலம் மாவட்டம் தேவூர் அருகே எரித்துக்கொலை செய்துள்ளார். இதையடுத்து அவர் அந்த காரை ஆந்திராவுக்கு கடத்திச் சென்று விற்று உள்ளார்.

நகை, பணம் பறிப்பு

மேலும் விமல்ராஜ், குமார், பாலாஜி, கார்த்திகேயன் ஆகிய 4 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் மேலாளராக பணிபுரிந்து வரும் முதியவர் ஒருவரை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 2 பவுன் நகை மற்றும் ரூ.1,000 ஆகியவற்றை பறித்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கில் அவர்களை பள்ளப்பட்டி போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

பின்னர் அவர்களை நகை மற்றும் கத்திகளை மறைத்து வைத்திருந்த இடத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு மண்ணில் புதைத்து வைத்திருந்த நகை மற்றும் கத்திகளை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து அவர்களை மீண்டும் சேலத்துக்கு அழைத்து வந்தனர். புதிய பஸ் நிலையம் பகுதியில் வந்தபோது விமல்ராஜ், குமார் ஆகியோர் சிறுநீர் வருவதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

தப்பி ஓடினார்

இதையடுத்து போலீசார் வாகனத்தை நிறுத்தி அவர்களை இறக்கி விட்டனர். ஏற்கனவே வலது காலில் அடிபட்டு இருந்ததால் குமார் உதவியுடன் விமல்ராஜ் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குமார் திடீரென விமல்ராஜை கீழே தள்ளிவிட்டு போலீசாரிடம் இருந்து தப்பித்து புதியதாக கட்டிவரும் பாலத்தில் வேகமாக தப்பி ஓடினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை பிடிக்க துரத்திக்கொண்டு ஓடினர்.

அப்போது குமார் பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது. மேலும் குமார் தள்ளிவிட்டதில் விமல்ராஜின் இடது கையில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து காயமடைந்த 2 பேரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே கூலிப்படை கும்பல் பற்றி அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொலை, கொள்ளைக்கு திட்டம்

இதுபற்றி போலீசார் கூறும்போது, விமல்ராஜ் உள்பட 4 பேரும் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரிடம் ஹவாலா பணம் இருப்பதை தெரிந்து கொண்டு அவரை கொன்று அந்த பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் அவர்கள் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நகைக்கடை நடத்தி வரும் தம்பதியை கொன்று அங்கு நகை, பணம் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர்.

குமார் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சப்ளையராக வேலை பார்த்துள்ளார். அங்கு அவரது நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் அவரை வேலையை விட்டு அந்த ஓட்டல் உரிமையாளர் நீக்கியுள்ளார். இதனால் அந்த ஓட்டல் உரிமையாளரை கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே விமல்ராஜை மற்றொரு கூலிப்படை கும்பல் காரை ஏற்றி கொல்ல முயன்றுள்ளது. இதில் தான் அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. சரியான நேரத்தில் இந்த கூலிப்படை கும்பலை பிடித்ததால் பல கொலை, கொள்ளைகளை தடுக்கமுடிந்தது என போலீசார் கூறினர்.

Next Story