வேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஆட்டோ, கார், லாரி, கனரக வாகனங்கள் நுழைய தடை அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை


வேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஆட்டோ, கார், லாரி, கனரக வாகனங்கள் நுழைய தடை அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 7 Jun 2020 4:40 AM GMT (Updated: 7 Jun 2020 4:40 AM GMT)

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஆட்டோ, கார் மற்றும் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேலூர், 

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஆட்டோ, கார் மற்றும் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. விதி மீறியவர்களுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

கமிஷனர் உத்தரவு

வேலூர் பழைய பஸ் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டத்தால் பரபரப்பாக காணப்படும். இங்கு ஆட்டோக்கள், கார்கள், சரக்கு வாகனங்கள் அடிக்கடி வந்து செல்கிறது. பஸ் நிலையத்திற்குள்ளேயே ஆட்டோக்கள் வந்து பணிகளை ஏற்றி செல்கின்றனர். ஒரு சில ஆட்டோ டிரைவர்களின் அத்துமீறலால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பயணிகளும் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.

மேலும் ஊரடங்கு நேரத்தில் பஸ்கள் இயக்கப்படாத நாட்களில் பஸ் நிலைய வளாகத்துக்குள் லாரிகளும் நிற்க வைக்கப்பட்டிருந்தன. தற்போது குறைந்த அளவிலான பஸ்களே ஓடுவதால் கனரக வாகனங்கள், கார்கள் நிறுத்தி வைப்பதும் தொடர்கிறது.

இந்த நிலையில் வேலூர் பஸ் நிலையத்துக்குள் பஸ்கள் தவிர ஆட்டோ, கார், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் நுழையக்கூடாது. பஸ் நிலைய வளாகத்துக்குள் இருசக்கர வாகனங்களை நிறுத்தக் கூடாது என மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவிட்டார்.

இதனைதொடர்ந்து நேற்று காலை 2-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன் தலைமையில் சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனங்களை அப்புறப்படுத்தினர். மேலும், அத்துமீறி நுழைந்த ஆட்டோக்களுக்கு ரூ.2,500 அபராதம் விதித்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களை எச்சரித்து அனுப்பினர். பஸ் நிலையத்தில் முககவசம் அணியாத பயணிகள் 11 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.

காவல்துறை மூலம் நடவடிக்கை

இது சம்பந்தமாக பஸ் நிலைய நுழைவு பகுதி உள்பட 2 இடங்களில் அறிவிப்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில், “பஸ் நியைத்தில் பஸ்கள் மட்டும் செல்லவும், வரவும் அனுமதி உண்டு. சரக்கு வாகனங்கள், லாரிகள், 4 சக்கர வாகனங்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள், சைக்கிள், பிற வாகனங்கள் போன்றவை நிறுத்தி வைக்கவோ அல்லது உள்ளே வரவோ, செல்லவோ அனுமதி இல்லை. மீறினால் அசம்பாவிதங்கள் நேர்ந்தாலோ அல்லது விபத்துகள் நேர்ந்தாலோ மாநகராட்சி பொறுப்பு ஏற்காது.

பஸ்களை தவிர வேறு வாகனங்கள் உள்ளே வந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். விதி மீறும் வாகனங்களை பறிமுதல் செய்தல், அபராதம் விதித்தல் மற்றும் பிற சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை மூலம் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனவும் கூறப்பட்டுள்ளது.

அதிகாரிகள் அபராதம் விதித்து சென்றவுடன் மீண்டும் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளே நுழைந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தின. மேலும் பல இடங்களில் மோட்டார்சைக்கிள்களும், கார்களும் நிறுத்தப்பட்டது. இதை முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க இதற்கென தனி அதிகாரிகள் நியமிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story