ஊட்டி அரசு கலைக்கல்லூரி சார்பில் ஆன்லைன் மூலம் கருத்தரங்கம்: பாலைவன வெட்டுக்கிளிகள் குளிர்பிரதேசங்களுக்கு வர வாய்ப்பு இல்லை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு


ஊட்டி அரசு கலைக்கல்லூரி சார்பில் ஆன்லைன் மூலம் கருத்தரங்கம்: பாலைவன வெட்டுக்கிளிகள் குளிர்பிரதேசங்களுக்கு வர வாய்ப்பு இல்லை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு
x
தினத்தந்தி 8 Jun 2020 4:37 AM IST (Updated: 8 Jun 2020 4:37 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அரசு கலைக்கல்லூரி சார்பில் ஆன்லைன் மூலம் நடந்த கருத்தரங்கில் பாலைவன வெட்டுக்கிளிகள் குளிர்பிரதேசங்களுக்கு வர வாய்ப்பு இல்லை என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கிருஷ்ணன் பேசினார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரி விலங்கியல் மற்றும் வனஉயிரியல் துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்த கருத்தரங்கம் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. கூகுளில் உள்ள ஒரு செயலி மூலம் பதிவு செய்த மாணவ-மாணவிகள் ஒரே நேரத்தில் ஒன்றிணைக்கப்பட்டு கருத்தரங்கு நடந்தது.

 கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கினார். கருத்தரங்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கிருஷ்ணன் பேசியதாவது:-

மலை மாவட்டமான நீலகிரியில் சாதாரண வகை வெட்டுக்கிளிகளே உள்ளன. பாலைவன வெட்டுக்கிளிகள் வந்ததாக இதுவரை எந்த பதிவும் இல்லை. குளிர்பிரதேசங்களுக்கு பாலைவன வெட்டுக்கிளிகள் வர வாய்ப்பு இல்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமாநிலங்களில் வீசிய அனல் காற்று வெட்டுக்கிளிகள் வர காரணமாக அமைந்தது. இந்த வெட்டுக்கிளிகள் நீலகிரிக்கு வந்தால் காய்கறிகளை தாக்கும். ஆனால், இங்கு பார்த்த வெட்டுக்கிளிகள் இந்த வகையை சார்ந்தது அல்ல.

வெப்பநிலை குறைவு

பருவநிலை மாறுபாடு மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற காலநிலை மாற்றங்களால் வெட்டுக்கிளிகள் அதிகரிக்கும். இதை பூச்சி மருந்துகளால் விரட்டாமல் இயற்கை சார்ந்த மருந்துகளை பயன்படுத்தி அழித்தால் சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம். உதாரணமாக ஒலி எழுப்பி வெட்டுக்கிளிகளை விரட்டலாம். ஊட்டியில் கடந்த 150 ஆண்டுகளுக்கு முந்தைய வெப்பநிலையை, கடந்த ஆண்டு வெப்பநிலையுடன் ஒப்பிடும் போது 0.1 டிகிரி குறைந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கோவை பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர்(பொறுப்பு) முருகன், விலங்கியல் துறை தலைவர் எபனேசர் மற்றும் உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். ஆன்லைன் மூலம் நடந்த இந்த கருத்தரங்கு யூடியூப்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை 800 பேர் பார்த்தனர். அதேபோல் சமீபத்தில் உலக உயிர் பன்மை தினத்தையொட்டியும் கருத்தரங்கு நடந்தது.

Next Story