புதுச்சேரியில் வேகமாக பரவுகிறது: ஒரேநாளில் டாக்டர் உள்பட 9 பேருக்கு கொரோனா


புதுச்சேரியில் வேகமாக பரவுகிறது: ஒரேநாளில் டாக்டர் உள்பட 9 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 8 Jun 2020 5:05 AM IST (Updated: 8 Jun 2020 5:05 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் நேற்று டாக்டர் உள்பட 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி,

இந்தியாவில் ஜனவரி மாதம் பரவ தொடங்கிய கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு சதவீதமும் அதிகரித்து வருகிறது.

புதுவை மாநிலத்தில் ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துகொண்டே வருகிறது. நாள்தோறும் 5-க்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தவகையில் கொரோனா வைரஸ் தொற்றானது சாதாரண மக்களை மட்டுமின்றி சிகிச்சை அளிக்கும் டாக்டர்களையும் விட்டு வைக்கவில்லை. ஜிப்மரில் பணியாற்றி வந்த 4 பயிற்சி டாக்டர்களுக்கு நேற்று முன்தினம் தொற்று பாதிப்பு உறுதியானது.

இந்தநிலையில் நேற்று மேலும் ஒரு பயிற்சி டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் தங்கி இருந்த விடுதி மூடப்பட்டது. ஜிப்மர் மருத்துவமனை தொழில்நுட்ப உதவியாளர் ஒருவருக்கும், ஊர்க்காவல் படை வீரர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பயிற்சி டாக்டருடன் தொடர்பில் இருந்த அவரது உறவினர்கள் 3 பேர், மேலும் 3 பேர் என 9 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர்களையும் சேர்த்து புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 119 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 2பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஏற்கனவே 47 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 70 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story