வெளி மாநிலங்கள், சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருபவர்கள் 7 நாட்கள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள் ; கலெக்டர் தகவல்


வெளி மாநிலங்கள், சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருபவர்கள் 7 நாட்கள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள் ; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 7 Jun 2020 11:53 PM GMT (Updated: 7 Jun 2020 11:53 PM GMT)

வெளி மாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருபவர்கள் 7 நாட்கள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள் என்று கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.


கிருஷ்ணகிரி,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவிய நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டும் நீண்ட நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 37 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 21 பேர் குணமடைந்த நிலையில் 16 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இவர்கள் அனைவரும் சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வந்ததும், அவர்கள் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவியதும் தெரியவந்தது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் ஆணைப்படி கொரோனா தடுப்பு பணிகள் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் வெளி மாநிலங்களான குஜராத், மராட்டியம், டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் நபர்கள், சென்னை மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் கட்டாயம் 7 நாட்கள் கெலமங்கலம் அரசு மாணவர் பாலிடெக்னிக் கல்லூரி விடுதி, தேன்கனிக்கோட்டை சீனிவாசா மகால், ஓசூர் ஜூஜூவாடி நகராட்சி தொடக்கப்பள்ளி, மத்திகிரி அரசு கலைக்கல்லூரி, ஓசூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பர்கூர் அரசு மகளிர் கலை கல்லூரி, பெரியமுத்தூர் ஆர்.ஐ.ஆர்.டி., கட்டிகானப்பள்ளி மாணவர் விடுதி ஆகிய முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள். அவர்களுக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் பிறகு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதில் கலெக்டர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்க கூடிய மக்கள், தங்கள் பகுதியில் யாரேனும் வெளி மாநிலங்களில் இருந்தோ, வெளி மாவட்டங்களில் இருந்தோ வந்தால் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு இருப்பது தெரியாமல் பலரும் வந்து தொற்றை பரப்பி வருகிறார்கள். எனவே வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்கள் கட்டாயம் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டியது உள்ளது என தெரிவித்தனர்.

Next Story