அமர்ந்து சாப்பிட இன்று முதல் அனுமதி: ஓட்டல்களில் மேஜை, நாற்காலியை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்
வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், திண்டுக்கல்லில் உள்ள ஓட்டல்களில் மேஜை, நாற்காலியை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திண்டுக்கல்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மளிகை கடைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு டீக்கடைகள், ஓட்டல்கள், மளிகை கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் ஓட்டல்களில் பார்சல் முறையில் மட்டுமே பொதுமக்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதன்படி ஓட்டல்களில் பார்சல் முறையில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இன்று முதல் அனுமதி
இந்தநிலையில் ஓட்டல்களில் 50 சதவீத இருக்கை, மேஜைகளுடன் செயல்பட இன்று (திங்கட்கிழமை) முதல் அனுமதி வழங்கப்படுவதாக அரசு அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் அமருவதற்காக சமூக இடைவெளியில் மேஜை, நாற்காலிகளை வரிசைப்படுத்தி, அவற்றை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடந்தது.
ஓட்டல்களில் இன்று முதல் அமர்ந்து சாப்பிடலாம் என்ற தகவலை அறிந்ததும் திண்டுக்கல்லை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஓட்டல்களில் சாப்பிட செல்பவர்களுக்கு கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள கிருமிநாசினி மருந்து வழங்க ஓட்டல் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்காக கூடுதலாக கட்டணம் எதுவும் வசூலிக்கக்கூடாது என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story