மரவள்ளியில் மாவுப்பூச்சி பாதிப்பை கட்டுப்படுத்துவது எப்படி? கலெக்டர் மெகராஜ் விளக்கம்


மரவள்ளியில் மாவுப்பூச்சி பாதிப்பை கட்டுப்படுத்துவது எப்படி? கலெக்டர் மெகராஜ் விளக்கம்
x
தினத்தந்தி 8 Jun 2020 12:48 AM GMT (Updated: 8 Jun 2020 12:48 AM GMT)

மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி பாதிப்பை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து கலெக்டர் மெகராஜ் விளக்கம் அளித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல்,

மரவள்ளி உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் 17,500 ஹெக்டேர் பரப்பளவில் ஆண்டுதோறும் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது வரை 15,644 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு உள்ளது. மரவள்ளியில் தற்போது மாவுப்பூச்சி தாக்கம் கண்டறியப்பட்டு உள்ளது. தற்சமயம் நிலவி வரும் அதிக வெப்பநிலையின் காரணமாக மாவுப்பூச்சிகளின் தாக்கம் அதிகமாக தென்படுகிறது.

இந்த மாவுப்பூச்சி மரவள்ளியின் இளம்தளிர், தண்டு மற்றும் இலையின் அடிப்பரப்பில் இருந்து சாற்றை உறிஞ்சி சேதப்படுத்தும். இதனால் நுனிக்குருத்துகள் உருமாறியும், வளர்ச்சி குன்றியும் காணப்படும். இதனால் ஒளிச் சேர்க்கையின் வீரியம் குறைந்து கிழங்கு உற்பத்தி பெரிதும் பாதிக்கப்படும். எனவே இந்த பாதிப்பை கட்டுப்படுத்த விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையினை பின்பற்றுதல் வேண்டும்.

போதிய அளவு நீர் பாய்ச்சுதல் பாதிப்பினை குறைக்கும். நடவு செய்யும் போது அடி உரமாக ஒரு ஹெக்டேருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு பயன்படுத்தல் இப்பூச்சியின் தீவிரத்தை கட்டுப்படுத்தும். பிற மாவட்டம் அல்லது மாநிலத்தில் இருந்து நடவுப் பொருட்கள் வாங்கி வந்தால், நடவின் போது பூச்சி மருந்து கரைசலில் 60 நிமிடங்கள் கரணைகளை நனைத்து நடவு செய்ய வேண்டும்.

மேலும் மாவுப்பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்தி, விவசாயிகளை மகசூல் இழப்பில் இருந்து காப்பதற்காக முதல் முறை அசாடிராக்டின் மருந்தும், இரண்டாம் முறையாக புரோபினோபாஸ் மருந்தும் மானியமாக வழங்கப்படுகிறது.

மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல் அறிகுறி காணப்பட்டால், விவசாயிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட உதவி தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களை அளித்து பதிவு செய்து, பயிர் பாதுகாப்பு முறைகளை கையாண்டு, அரசு மானியம் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story