சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்


சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு: கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 8 Jun 2020 6:47 AM IST (Updated: 8 Jun 2020 6:47 AM IST)
t-max-icont-min-icon

சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் நேற்று 3-வது நாளாக போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பனமரத்துப்பட்டி,

சேலம்-சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் இந்த திட்டத்துக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்து 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் சேலத்தில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் அருகே பூலாவரி கிராமத்தில் கடந்த 5-ந் தேதி விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்று முன்தினம் குப்பனூரில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக 3-வது நாளாக நேற்று சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி பகுதியில் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் ஒன்றிணைந்து கருப்புக்கொடி ஏந்தி விவசாய நிலத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:-

சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் 8 வழிச்சாலை திட்ட அரசாணையை ரத்து செய்தும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும், விவசாய நிலங்களை அளிக்கக்கூடாது என்றும் தெளிவாக கூறியுள்ளது. இருப்பினும் மத்திய, மாநில அரசுகள் 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவதில் குறியாக உள்ளன.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் அவர்களுக்கு உணவு பொருட்கள் காய்கறிகள் அளித்து விவசாயிகள் அவர்களை காப்பாற்றினர். ஆனால் அரசு விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் அழிக்கும் நோக்கத்தோடு இந்த வழக்கு குறித்து மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரியுள்ளது.

இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலாகும். இதனை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். மேலும் இந்த திட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் கருப்பணன் ஆகியோருக்கு நாங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story