ஓட்டல்கள், விடுதிகள், மால்களுக்கு அனுமதி: கர்நாடகத்தில் 75 நாட்களுக்கு பிறகு கோவில்கள் இன்று முதல் திறப்பு


ஓட்டல்கள், விடுதிகள், மால்களுக்கு அனுமதி:  கர்நாடகத்தில் 75 நாட்களுக்கு பிறகு கோவில்கள் இன்று முதல் திறப்பு
x
தினத்தந்தி 8 Jun 2020 1:19 AM GMT (Updated: 8 Jun 2020 1:19 AM GMT)

கர்நாடகத்தில் 75 நாட்களுக்கு பிறகு இன்று முதல் கோவில்கள், ஓட்டல்கள், மால்கள், விடுதிகள் திறக்கப்படுகிறது. அங்கு கொரோனா பரவலை தடுக்க முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

பெங்களூரு,

கர்நாடகம் உள்பட இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முழு ஊரடங்கு பிரதமர் மோடியால் அமல்படுத்தப்பட்டது.

இந்த ஊரடங்கு 5-வது முறையாக வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, பஸ், ஆட்டோ, வாடகை கார், கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. மக்கள் அதிகம் கூடும் கோவில்கள், உணவகங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், வணிக வளாகங்கள் (மால்கள்), நீச்சல் குளங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் மத்திய அரசு, கோவில்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்களை ஜூன் 8-ந் தேதி முதல் திறக்க அனுமதி அளித்து வழிகாட்டுதலை வெளியிட்டது. அதன் அடிப்படையில் கர்நாடகத்தில் 8-ந் தேதி (அதாவது இன்று) முதல் கோவில்கள், ஓட்டல்கள், ரெசார்ட், வனப்பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள், வணிக வளாகங்களை திறக்க அனுமதி அளிப்பதாக கர்நாடக அரசு அறிவித்தது.

இதுதொடர்பாக ஓட்டல்கள், வணிக வளாகங்கள், உணவகங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகளை முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று முன்தினம் நேரில் வரவழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய எடியூரப்பா, ஓட்டல்கள், உணவகங்கள், வணிக வளாகங்களில் மக்கள் அதிகம் கூடுவார்கள். இதனால் கொரோனா வைரசை தடுக்க அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் 75 நாட்களுக்கு பிறகு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர கோவில்கள், ஓட்டல்கள், உணவகங்கள், வணிக வளாகங்கள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகின்றன. குறிப்பாக உணவகங்களில் தனிமனித இடைவெளியை உறுதி செய்ய இருக்கைகள் மற்றும் மேசையை போடும் பணியில் உணவக நிர்வாகத்தினர் நேற்றே ஈடுபட்டனர். உணவகங்களை திறந்து தண்ணீர் ஊற்றி கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தினர்.

பெங்களூருவில் சாளுக்கிய சர்க்கிளில் ஒரு பிரபலமான உணவகம் உள்ளது. அந்த உணவகத்தில் 6 அடி இடைவெளிவிட்டு இருக்கைகள், மேசை போடப்பட்டுள்ளன. இதுகுறித்து அந்த ஓட்டல் நிர்வாகி கூறுகையில், “எங்கள் உணவகத்தில் முன்பு ஒரு நாற்காலியில் 4 பேர் அமர்ந்து சாப்பிட்டனர். இப்போது அதில் 2 பேரை மட்டுமே அமர வைக்க முடிவு செய்துள்ளோம். மேலும், ஒரு மேசைக்கும், இன்னொரு மேசைக்கும் இடையே 6 அடி இடைவெளி விட்டு மேசைகளை போட்டுள்ளோம். மக்கள் தைரியாக வந்து சாப்பிடுவார்களா என்று தெரியவில்லை. மக்களின் வருகை எந்த அளவுக்கு உள்ளது என்பதை அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும். கொரோனா பயம் இருப்பதால், மக்கள் உணவகங்களுக்கு வந்து சாப்பிட ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்றே கருதுகிறேன். அதனால் உணவகத்தில் மக்களின் நெரிசல் என்பது அதிகமாக இருக்காது. அரசின் வழிகாட்டுதலை நாங்கள் தீவிரமாக பின்பற்றுவோம். வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களை நாங்கள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதே போல் பெங்களூரு உள்பட மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கோவில்களை திறக்க தேவையான ஏற்பாடுகளை அதன் நிர்வாகத்தினர் செய்து உள்ளனர். அதாவது தர்மஸ்தலா, குக்கே சுப்பிரமணியா, பாதாமியில் உள்ள பனசங்கரி கோவில், மலை மாதேஸ்வரா, மைசூரு சாமுண்டீஸ்வரி, நஞ்சன்கூட்டில் உள்ள நஞ்சுண்டேஸ்வரா ஆகிய கோவில்களை திறக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கோவில்களில் எந்த சிறப்பு பூஜைக்கும் அனுமதி கிடையாது. அன்னதானம், பிரசாதம் போன்றவற்றை வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றுவிட வேண்டும்.

பக்தர்கள், பழங்கள், தேங்காய், பூ உள்ளிட்ட எதையும் கொண்டுவரக்கூடாது என்று இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. கோவில் மணி அடிக்கவும் அனுமதி கிடையாது. கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருப்பதால், உடுப்பியில் மட்டும் கோவில்கள் திறக்கப்படாது என்று கூறப்படுகிறது. கர்நாடகத்தில் இன்று கோவில்கள் திறக்கப்பட இருப்பதால் பக்தர்கள் வழிபட தயாராகி வருகிறார்கள். இதையொட்டி கடந்த சில நாட்களாக கோவில்களை கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து பெங்களூருவை சேர்ந்த ஒரு கோவில் அர்ச்சகர் கூறுகையில், “65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயக்கு உட்பட்டவர்கள் கோவிலுக்கு வருவதை சிறிது நாட்கள் தவிர்க்க வேண்டும். கொரோனாவை தடுக்க அரசு கூறியுள்ள கட்டுப்பாடுகளை கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். நாங்கள் கோவிலை திறக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். தண்ணீர் ஊற்றி கோவிலை தூய்மைபடுத்தியுள்ளோம் என்றார்.

அதுபோல் கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களும் இன்று முதல் திறக்கப்படுகிறது. மேலும் பெங்களூருவில் உள்ள பெரிய வணிக வளாகங்கள், இன்று முதல் திறக்கப்படுகின்றன. அங்கு சமூக விலகலை பின்பற்றவும், வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வருவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர். தங்கும் விடுதிகளும் விருந்தினர்களை வரவேற்க தயாராகியுள்ளன. அத்துடன் பன்னரகட்டா உயிரியல் பூங்கா, மைசூரு சாமராஜேந்திரா உயிரியல் பூங்கா உள்பட மாநிலம் முழுவதும் உயிரியல் பூங்காக்களும் இன்று பொதுமக்கள் பார்வையிட திறக்கப்படுகிறது.

கோவில்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகளுக்கு வருபவர்கள், முதலில் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். உடல் வெப்பம் அதிகமாக இருந்தால், அத்தகையவர்களை உள்ளே அனுமதிப்பது இல்லை என்று அதன் நிர்வாகங்கள் முடிவு எடுத்துள்ளன.

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கோவில்கள், ஓட்டல்கள், உணவகங்கள், வணிக வளாகங்களுக்கு மக்களின் வருகை எந்த அளவுக்கு இருக்கும் என்பதை அடுத்த சில நாட்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Next Story