ஊரடங்கால் பூட்டப்பட்டுள்ள நூலகங்கள் திறப்பது எப்போது? வாசகர்கள் எதிர்பார்ப்பு


ஊரடங்கால் பூட்டப்பட்டுள்ள நூலகங்கள் திறப்பது எப்போது?   வாசகர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 8 Jun 2020 7:26 AM IST (Updated: 8 Jun 2020 7:26 AM IST)
t-max-icont-min-icon

புத்தக வாசிப்பாளர்களின் வசதிக்காக அரசு நூலகங்களை திறக்க வேண்டும் என்று நூலக வாசகர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம்,

உலகத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் மக்கள் வசதிக்காக சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள், கார்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல, முடி திருத்தும் நிலையம், அழகு நிலையம் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

அறிவுப்பசிக்கு தீனிபோடும் நூலகங்கள் கடந்த 75 நாட்களுக்கும் மேலாக பூட்டியே கிடக்கிறது. மனிதனுக்கு மன அமைதிக்கான வழிகளில் ஆன்மிக தேடல் மற்றும் அறிவுத்தேடல் ஆகும். இதில், அறிவுத்தேடலுக்கு புத்தகங்களே உதவியாக உள்ளன. அனைத்து புத்தகங்களையும் எல்லோராலும் வாங்கி படிக்க முடியாது. இதற்காக அரசு மற்றும் தனியார் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

புத்தகங்கள்

அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு நூலகங்களே அறிவு புத்துயிர் அளித்து வருகின்றன. மதுரை மாவட்டத்தில் ஒரு மையநூலகம், கிரேடு-2 நூலகம் 12, கிரேடு-3 நூலகம் 75, ஊர்ப்புற நூலகம் 70, பகுதிநேர நூலகம் 7 ஆகியன உள்ளன. இங்கு கதை, சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல்கள், நகைச்சுவை, சமையல், வீட்டு உபயோக பொருள்கள், வரலாறு, பொருளாதாரம், கம்ப்யூட்டர், துணுக்குகள், தினசரி, வார, மாதாந்திர இதழ்கள் என பல்வேறு புத்தகங்கள் உள்ளன.

இதுதவிர, போட்டித்தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கான புத்தகங்களும் உள்ளன. பொருளாதாரத்தில் பின்தங்கிய அரசுப்பணிக்கு செல்ல போட்டித்தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கு இந்த நூலகங்களில் உள்ள புத்தகங்களே பெரும் உதவியாக உள்ளன. இதற்காக போட்டித்தேர்வு வாசகர் வட்டமும் ஒரு சில நூலகங்களில் செயல்படுகிறது.

திறக்க வேண்டும்

இந்த ஊரடங்கு காலத்தில் ஒவ்வொருவரும் பொழுதை தங்களுக்கு பிடித்த வகையில் கழித்தனர். இதில் நாடு முழுவதும் ஆபாச இணையதளங்கள் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தான் பலமடங்கு இருந்தது. இந்த நிலையில், புத்தக கடைகள், நூலகங்களை திறக்க வேண்டும் என்று வாசிப்பு பழக்கம் இருப்பவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

அண்டை மாநிலமான கேரளத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் முதலில் நூலகங்களே திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, புத்தக வாசிப்பாளர்களின் வசதிக்காக விதிமுறைகளை பின்பற்றி நூலகங்களை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நூலக வாசகர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story