தமிழகத்தில் சிறு, குறு தொழில்களை மீட்க நடவடிக்கை ; அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்
தமிழகத்தில் கொரோனாவால் முடக்கப்பட்ட சிறு, குறு தொழில்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்தார். அப்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.
பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், உதவி கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் எம்.சி.சம்பத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய தொழிலக கூட்டமைப்பு சார்பில் ஒளிரும் தமிழ்நாடு என்ற தலைப்பில் காணொலி மாநாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன் மூலம் புதிய தொழிற்சாலைகளுக்கான முதலீடு கிடைக்கும். தற்போது கொரோனா வைரஸ் பரவி வரும் வேளையில் சீனாவில் இருந்து பல தொழில் நிறுவனங்கள் வெளியேறி வருகிறது.
இந்தியாவுக்கு வரும் தொழில் நிறுவனங்களை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு இந்த மாநாடு உதவும். இந்த மாநாட்டில் தமிழகத்தின் தொழில்கொள்கை, தகவல் தொழில்நுட்பம், இடக்கொள்கை, ஒள்றைச்சாளர முறையில் அனுமதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் குறித்து பேசி உள்ளோம்.
இந்திய தொழிலக கூட்டமைப்பு வெளியிட்ட புத்தகத்திலும், தமிழகத்தில் உள்ள தொழில் வாய்ப்புகள், கட்டமைப்புகள், வசதிகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து தொழிற்சாலைகளிலும் சமூக இடைவெளியை கடைபிடித்து முழு உற்பத்தி திறனை எட்டும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
தென்கொரியா போன்ற பல்வேறு நாட்டில் உள்ள தொழில்நிறுவனங்களுக்கு முதல்-அமைச்சர் கடிதம் எழுதி அவர்களை வரவேற்று உள்ளார். 2019-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்து கொண்டதில் 77 நிறுவனங்கள், தங்களது உற்பத்தியை தொடங்கி உள்ளது. 171 நிறுவனங்கள் கட்டுமான பணி, எந்திரங்களை நிறுவுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆகவே இந்த மாநாடு வெற்றிகரமான மாநாடாக அமைந்துள்ளது.
கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டது. இந்த நேரத்தில் தமிழகத்தில் உள்ள சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது பற்றி கேட்கிறீர்கள். தமிழகத்தில் செயல்பட்டு வரும் சிறு, குறு தொழில் நிறுவனங்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் எடுப்பார். இது பற்றி பல்வேறு நிபுணர்களுடன் ஆலோசனையும் செய்து வருகிறார். மற்ற மாநிலங்களில் அறிவிக்கப்படும் திட்டங்களையும் கவனித்து வருகிறோம். இதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் விரைவில் வெளியிடுவார்.
இவ்வாறு அமைச்சர் எம்.சி. சம்பத் கூறினார்.