சென்னையில் இருந்து திருப்பூருக்கு இ-பாஸ் பெறாமல் வாடகை காரில் வந்த 4 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு
சென்னையில் இருந்து திருப்பூருக்கு இ-பாஸ் பெறாமல் வாடகை காரில் வந்த 4 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
திருப்பூர்,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தற்போது 5-வது கட்ட ஊரடங்கு உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது.
அதன்படி பஸ் போக்குவரத்து பல்வேறு மாவட்டங்களை இணைத்து மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு, தற்போது தொடங்கியுள்ளது. இதுபோல் சில மாவட்டங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இருந்து குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவையில்லை எனவும் அரசு அறிவித்துள்ளது.
4 பேர் கண்காணிப்பு
ஆனால் சென்னை உள்ளிட்ட கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு செல்வதற்கும், அங்கிருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வதற்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை திருப்பூர் வேலன்நகர் பகுதியை சேர்ந்த 9 மாத பெண் குழந்தை, 19 வயது இளம்பெண், 16 வயது சிறுவன், 25 வயது இளம்பெண் ஆகிய 4 பேர் சென்னையில் இருந்து இ-பாஸ் பெறாமல் திருப்பூருக்கு வாடகை காரில் வந்துள்ளனர்.
இது குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் குணசேகரன் எம்.எல்.ஏ.விற்கு தகவல் தெரிவித்தனர். அவர் இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அந்த 4 பேரும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். தற்போது அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story