தஞ்சை - திருக்காட்டுப்பள்ளியில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தஞ்சை - திருக்காட்டுப்பள்ளியில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

தஞ்சை, திருக்காட்டுப்பள்ளியில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவை சார்பில் தஞ்சை ரெயிலடியில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அருளரசன், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், பாலியல் தொழில் ஈடுபடுத்தப்பட்ட வடமாநில பெண்ணின் உயிருக்கு ஆபத்துள்ளதால் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவருக்கு உயர் தர மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். குற்றவாளிகள் மீது கொலை முயற்சி, பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே இந்த தொழில் ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்களை கண்டுபிடித்து இந்த கும்பலிடம் இருந்து மீட்க வேண்டும்.

இந்த கும்பலுக்கு ஆதரவாக செயல்படும் அனைவரையும் கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இளம்பெண்களை பாதுகாக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன், சி.ஐ.டி.யூ. மாவட்ட துணைச் செயலாளர் அன்பு மற்றும் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பாலியல் தொழிலில் வடமாநில பெண்ணை ஈடுபடுத்தியதாக கைது செய்யப்பட்ட செந்தில்குமார், ராஜம் ஆகியோரின் உருவப்படத்தை செருப்பால் அடித்து படங்களை கிழித்து வீசினர்.

பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பூதலூர் ஒன்றிய ஜனநாயக மாதர் சங்க செயலாளர் வசந்தா தலைமை தாங்கினார். இதில் பூதலூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பாஸ்கர், நிர்வாக குழு உறுப்பினர்கள் சுல்தான், பாலசுப்பிரமணியன், மல்லிகா, உஷாராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், தஞ்சையில் மேற்கு வங்க மாநில பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல் திருக்காட்டுப்பள்ளி மற்றும் செங்கிப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கிப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். திருக்காட்டுப்பள்ளியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க நிர்வாகிகள் கலைச்செல்வி, ஆயிராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story