தென்னம்பாளையம் சந்தைக்கு பொதுமக்கள் செல்ல தடை: வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முககவசம் அணியாவிட்டால் அபராதம் கலெக்டர் உத்தரவு


தென்னம்பாளையம் சந்தைக்கு பொதுமக்கள் செல்ல தடை: வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முககவசம் அணியாவிட்டால் அபராதம் கலெக்டர் உத்தரவு
x

இன்று முதல் தென்னம்பாளையம் சந்தைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் முககவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் நோயை முற்றிலும் தடுத்திடும் விதமாக சமூக விலகலை தீவிரப்படுத்தும் வகையில், தமிழக அரசின் உத்தரவின் பேரில் வரும் 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வரும் பொதுமக்கள் காய்கறி கடைகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள், மருந்தகங்கள், பழக்கடைகள் போன்ற பொது இடங்களில் கூடும் போது தவறாது குடைகளை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அதனை மறந்து காய்கறி மற்றும் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக வருகிறது.

பொதுமக்கள் செல்ல தடை

எனவே பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் இன்று (திங்கட்கிழமை) முதல் திருப்பூர் தெற்கு வட்டத்தில் உள்ள தென்னம்பாளையம் காய்கறி சந்தை மொத்தம் மற்றும் சில்லரை காய்கறி விற்பனையாளர்களுக்காக மட்டும் இயங்கும்.

இந்த சந்தைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. அவ்வாறு மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படும் காய்கறிகள் மாநகராட்சி எல்லையில் அந்தந்த பகுதியில் விற்பனை செய்யப்படும். மேலும், திருப்பூர், எல்.ஆர்.ஜி. கலைக்கல்லூரி வளாகம் மற்றும் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் மட்டும் பொதுமக்கள் வந்து வாங்கி செல்லும் வகையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படும்.

கடுமையான நடவடிக்கை

இதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் மீன் வாங்க வரக்கூடாது. அவ்வாறு, வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், மற்ற நாட்களில் மீன் மார்க்கெட்டிற்கு வந்து மீன்கள் வாங்கி செல்லலாம்.

மேலும், வீட்டை விட்டு முககவசம் இல்லாமல் வெளியே வருபவர்கள், பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு போலீசாரால் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story