ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் கொரோனா பரிசோதனை மையம் ; கலெக்டர் தொடங்கி வைத்தார்


ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் கொரோனா பரிசோதனை மையம் ;  கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 8 Jun 2020 11:04 AM IST (Updated: 8 Jun 2020 11:04 AM IST)
t-max-icont-min-icon

சென்னை, பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்காக, ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் கொரோனா பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதை, கலெக்டர் தொடங்கி வைத்தார்.

பனப்பாக்கம்,

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த மாவட்டங்களில் இருந்து பலர் வெளியேறி, அண்டை மாவட்டங்களுக்கு வருகின்றனர்.

மேற்கண்ட மாவட்டங்களில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு பலர் வருவதைக் கட்டுப்படுத்தவும், அவர்களால் இங்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும் ராணிப்பேட்டை மாவட்ட எல்லையில் நேற்று கொரோனா தொற்று பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

அந்த மையத்தை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்து, ஆய்வு மேற்கொண்டார். அதில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனம், அரக்கோணம் உதவி கலெக்டர் (பொறுப்பு) பேபிஇந்திரா, துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன், நெமிலி தாசில்தார் பாக்கியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் உள்பட பிற மாவட்டங்களில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வரும் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை, உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே அவர்கள் மாவட்டத்துக்குள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

உடல் வெப்பநிலை அதிகமாக இருப்பவர்கள் ஓச்சேரி, வாலாஜா, விஷாரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் 21 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். தனிமைப்படுத்தப்பட்டவர்களில் யாருக்கேனும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், உடனடியாக அவர்களுக்கு வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்து, தீவிர சிகிச்சை அளிக்கப்படும்.

அத்துடன் சென்னையில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வருவோர் கண்டிப்பாக இ.பாஸ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Next Story