வடகாடு அருகே டாஸ்மாக் கடையில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் திருட்டு


வடகாடு அருகே  டாஸ்மாக் கடையில் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் திருட்டு
x
தினத்தந்தி 8 Jun 2020 11:25 AM IST (Updated: 8 Jun 2020 11:25 AM IST)
t-max-icont-min-icon

வடகாடு அருகே டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து பெட்டி பெட்டியாக மதுபான பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

வடகாடு, 


புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள ஆலங்காடு கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்த பின்னர் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். நேற்று காலை அந்த டாஸ்மாக் கடையை திறக்க கடையின் மேற்பார்வையாளர் சூரியகுமார், விற்பனையாளர் கண்ணன் ஆகியோர் வந்தனர். அப்போது அந்த கடையின் ஷட்டரில் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜா, வடகாடு இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஹேமலதா, சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து மற்றும் போலீசார் வந்து, டாஸ்மாக் கடையை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். இதில் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து மதுபான பாட்டில்களை திருடிச்சென்றது தெரியவந்தது. அந்த கடைக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர்.

மதுபான பாட்டில்கள் திருட்டு

பின்னர் டாஸ்மாக் கடையில் இருந்த மதுபான பாட்டில்கள் குறித்து கடையின் மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர் ஆகியோர் கணக்கெடுத்தனர். இதில், கடையில் இருந்த மொத்த மதுபான பாட்டில்களின் மதிப்பு ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் என்றும், அவற்றில் உயர்தரமான மதுபான பாட்டில்கள் உள்பட மொத்தம் 576 மதுபான பாட்டில்கள் இருந்த 14 பெட்டிகள் திருடப்பட்டுள்ளதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு ரூ.88 ஆயிரத்து 800 என்றும், அவர்கள் கூறினர்.

மேலும் இது குறித்து வடகாடு போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டாஸ்மாக் கடையில் பெட்டி பெட்டியாக மதுபான பாட்டில்கள் திருட்டுபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story