நெல்லையில் ஓட்டல்களை கண்காணிக்க 10 குழுக்கள் அமைப்பு


நெல்லையில் ஓட்டல்களை கண்காணிக்க 10 குழுக்கள் அமைப்பு
x
தினத்தந்தி 8 Jun 2020 12:05 PM IST (Updated: 8 Jun 2020 12:05 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டல்களில் இன்று முதல் அமர்ந்து சாப்பிடுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளதால் அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? என்று கண்காணிக்க நெல்லையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

நெல்லை,

நெல்லை மாநகராட்சியும், நெல்லை மாநகர காவல் துறையும் இணைந்து, நெல்லை மாநகர பகுதியில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு முககவசம் வழங்கி அவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி நெல்லை சந்திப்பில் முககவசம் இல்லாமல் வருகிற வாகன ஓட்டிகளுக்கு முககவசம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நெல்லை டவுன் உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். நெல்லை மாநகராட்சி சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன் கலந்துகொண்டு வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக முககவசங்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாநகர பகுதியில் தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் 80 சதவீதம் பேர் முககவசம் அணிந்து செல்கிறார்கள். மீதி உள்ள 20 சதவீதம் பேரும் முககவசம் அணிய வேண்டும் என்பதற்காக தான் முககவசம் அணியாமல் வாகனம் ஓட்டி வருகிறவர்களுக்கு முககவசம் இலவசமாக வழங்கப்படுகிறது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரிடம் 100 முககவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் முககவசம் இல்லாமல் வருபவர்களுக்கு அதை வழங்கிவிட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். இதற்கு ரசீது உடனடியாக வழங்கப்படும்.

ஓட்டல்களில் நாளை (அதாவது இன்று) முதல் சமூக இடைவெளியில் 50 சதவீதம் பேர் அமர்ந்து சாப்பிட அரசு அனுமதி அளித்துள்ளது. அரசின் உத்தரவுகளை நெல்லை மாநகரத்தில் உள்ள ஓட்டல் உரிமையாளர்கள் கடைபிடிக்கிறார்களா? என்று கண்காணிக்க 10 குழுக்கள் அமைக் கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் ஆங்காங்கே உள்ள ஓட்டல்களுக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறி வெளியே சுற்றியவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் தற்போது அவர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 18-ந்தேதிக்கு பிறகு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை (அதாவது இன்று) முதல் வழங்கப்படும். வாகனங்களில் செல்வோர் தங்களை பாதுகாக்க எப்படி தலைகவசம் அணிந்து செல்கிறீர்களோ? அதுபோல் முககவசமும் கட்டாயம் அணிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தாமரை கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தில்லைநாயகம், துரைப்பாண்டியன், ஸ்டீபன், முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story