டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான ஓட்டல்கள் திறப்பு: குறைந்த அளவே வந்து உணவு சாப்பிட்ட மக்கள்
டெல்டா மாவட்டங்களில், பெரும்பாலான ஓட்டல்கள் திறக்கப்பட்டன. ஆனாலும் குறைந்த அளவே மக்கள் வந்து உணவு சாப்பிட்டனர்.
தஞ்சாவூர்,
டெல்டா மாவட்டங்களில், பெரும்பாலான ஓட்டல்கள் திறக்கப்பட்டன. ஆனாலும் குறைந்த அளவே மக்கள் வந்து உணவு சாப்பிட்டனர்.
ஓட்டல்கள் திறப்பு
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க தமிழகத்தில் ஓட்டல்கள், கோவில்கள் எல்லாம் அடைக்கப்பட்டன. ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதையொட்டி ஓட்டல்களை திறந்து பார்சல் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்தநிலையில் 2½ மாதங்களுக்கு பிறகு ஓட்டல்களில் பொதுமக்கள் அமர்ந்து சாப்பிட தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஓட்டல்கள் நேற்று திறக்கப்பட்டன.
ஓட்டலில் சாப்பிட வந்த அனைவரும் பரிசோதனை செய்யப்பட்டு, உடல் வெப்பநிலை அறியப்பட்டது. சானிடைசர் மூலம் கைகளை கழுவிய பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். உள்ளே 50 சதவீத இருக்கைகள் மட்டுமே போடப்பட்டு இருந்தது. சமூக இடைவெளி விட்டு பொதுமக்கள் அமர்ந்து சாப்பிட்டனர். உணவு பரிமாறியவர்கள் முக கவசம் அணிந்து இருந்தனர்.
குறைந்த அளவே வந்த மக்கள்
எல்லா ஓட்டல்களிலும் கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் சாப்பிடுவதற்கு கூட்டம் அதிகமாக வரவில்லை. குறைந்த அளவே மக்கள் வந்து சாப்பிட்டனர். காலை, மதியம், இரவு ஆகிய 3 நேரமும் குறைந்த அளவே மக்கள் வந்து சென்றனர். இதனால் இருக்கைகள் பெரும்பாலானவை காலியாகவே இருந்தன.
கோவில்கள் திறக்கப்படாததுடன், தொலைதூர பஸ்களும் இயக்கப்படாததால் வெளியூரில் இருந்து மக்கள் கூட்டம் வரவில்லை. இதனால் கூட்டம் இல்லாமலேயே பெரும்பாலான ஓட்டல்கள் காணப்பட்டன.
இது குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் கூறும்போது, உள்ளூர் மக்கள் அதிகம்பேர் ஓட்டல்களில் சாப்பிடுவது கிடையாது. வெளியூர்களில் இருந்து மக்கள் வந்தால்தான் பழையபடி வியாபாரம் நடக்கும் என்றனர்.
Related Tags :
Next Story