கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக்கோரி தொடர் போராட்டம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் தகவல்


கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக்கோரி தொடர் போராட்டம் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் தகவல்
x
தினத்தந்தி 9 Jun 2020 4:25 AM IST (Updated: 9 Jun 2020 4:25 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக்கோரி தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம், 

கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்கக்கோரி தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பரிசீலனை

கும்பகோணத்தை தலைநகராக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க பரிசீலனை செய்யப்படுவதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் சட்டசபையில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் பேசினார். ஆனால் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிப்பதில் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

இந்தநிலையில் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக உருவாக்குவதற்கான சிறப்புகள் குறித்த படங்களுடன் கூடிய பிரசுரத்தை கும்பகோணம் புதிய மாவட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் உருவாக்கி உள்ளனர்.

அதன் முதல் பிரதியை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் வழங்கினர். இதில் திருவிடைமருதூர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர் போராட்டம்

கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வலியுறுத்தி முதற்கட்டமாக ஒரு லட்சம் கடிதம் தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பும் போராட்டம் நடத்தப்படுகிறது. பின்னர் வருகிற 10-ந்தேதி திருவிடைமருதூரிலும், 15-ந்தேதி பாபநாசத்திலும், 20-ந்தேதி திருப்பனந்தாளிலும், 25-ந்தேதி நாச்சியார் கோவிலிலும் தபால் கார்டு அனுப்பும் போராட்டமும், 30-ந்தேதி கடையடைப்பு போராட்டமும், அடுத்தமாதம் (ஜூலை) 15-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் என தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று போராட்டக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கும்பகோணம் தாலுகா, பாபநாசம் தாலுகா, திருவிடைமருதூர் தாலுகா உள்ளிட்ட பகுதிகளுடன் வலங்கைமான் தாலுகா பகுதியையும் இணைத்து கும்பகோணத்தை புதிய மாவட்டத்தை உருவாக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று போராட்டக்குழுவினர் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story