10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: அரசு பள்ளிகளில் ஹால் டிக்கெட் வினியோகம் ஆசிரியர்கள் பணிக்கு வந்தனர்
தஞ்சை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வினியோகிக்கப்பட்டது. ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கு வந்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வினியோகிக்கப்பட்டது. ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கு வந்தனர்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் பள்ளிகள் எல்லாம் மூடப்பட்டதால் பொதுத்தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மண்டலம் வாரியாக போக்குவரத்தும் நடந்து வருகிறது. இதனால் வருகிற 15-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்வு எழுத தேவையான ஹால் டிக்கெட் கல்வித்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த பள்ளிகளிலும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஹால் டிக்கெட்
அரசு பள்ளிகளில் நேற்று முதல் மாணவ, மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் முன்பு 129 மையங்களில் பொதுத்தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இப்போது கொரோனா அச்சம் காரணமாக அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் 408 பள்ளிகளில் பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை 31 ஆயிரத்து 979 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தஞ்சை தென்கீழ் அலங்கத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஹால் டிக்கெட் வாங்குவதற்காக மாணவ, மாணவிகள் வந்தனர். அவர்கள் கை கழுவதற்கு வசதியாக சோப்பு, தண்ணீர் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
பணிக்கு வந்த ஆசிரியர்கள்
பின்னர் அவர்கள் பள்ளி மைதானத்தில் சமூக இடைவெளியுடன் நிற்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து 10 பேர் வீதம் வகுப்பறைக்குள் அழைக்கப்பட்டு, அவர்களுக்கு ஹால் டிக்கெட், 2 முக கவசம் வழங்கப்பட்டது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மாத்திரைகளையும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்கினர். தேர்வு நடைபெறும் நாளில் ஒரு முக கவசம் வழங்கப்படும்.
பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் நேற்று முதல் பணிக்கு கண்டிப்பாக வர வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து நேற்று முதல் அனைவரும் பணிக்கு வந்தனர்.
Related Tags :
Next Story