பெரிய மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படும் : முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி


பெரிய மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படும்  : முதல்-அமைச்சர் நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 9 Jun 2020 5:20 AM IST (Updated: 9 Jun 2020 5:20 AM IST)
t-max-icont-min-icon

சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் அலட்சியம் காட்டுவது நீடித்தால் பெரிய மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் விதிமுறைகளை கடைபிடித்து சாமி தரிசனம் செய்கிறார்கள். பெரிய மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகள் குறித்து எனக்கு புகார்கள் வருகின்றன. குறிப்பாக சமூக இடைவெளியை அங்கு கடைபிடிப்பதில்லை காவல்துறையினர் சொல்வதை கேட்பதில்லை என்று தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக இன்னும் 2 அல்லது 3 நாட்கள் பார்ப்போம். அதன் பின்னரும் இதே நிலை நீடித்தால் கடைகளை வேறு இடத்துக்கு மாற்றுவதை தவிர வேறு வழியில்லை.

புதுவையில் தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்க கடிதம் அனுப்பி வருகிறார்கள். கல்வி நிறுவனங்கள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை மட்டுமே வசூலிக்க வேண்டும். அதிகப்படியாக வசூலிக்கக் கூடாது. இப்போது மக்களிடம் வருமானமில்லை. பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்துவது தொடர்பான பிரச்சினை நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்ற உத்தரவு வந்தவுடன் அதன்படி நடவடிக்கை எடுப்போம். பள்ளிகளில் தேர்வு நடத்துவதற்கு முன்பு மாணவர்களை பள்ளிக்கு அழைத்து பாடம் நடத்தி தேர்வு எழுதச் செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வந்தது. இதுதொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளேன்.

கல்லூரிகளில் தேர்வு நடத்துவது தொடர்பாக புதுவை பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தரை தொடர்பு கொண்டு பேசினேன். தேர்வு நடத்துவது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதற்கு துணைவேந்தரும் மத்திய அரசின் அறிவிப்பின்படி செயல்படுவோம் என்று தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story