அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்ட போதிலும் சென்னையில் குறைவான ஓட்டல்களே திறப்பு


அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்ட போதிலும்  சென்னையில் குறைவான ஓட்டல்களே திறப்பு
x
தினத்தந்தி 9 Jun 2020 5:58 AM IST (Updated: 9 Jun 2020 5:58 AM IST)
t-max-icont-min-icon

50 சதவீத இருக்கைகளில் அமர்ந்து சாப்பிடலாம் என அரசு அனுமதி அளித்த நிலையிலும், சென்னையில் நேற்று குறைவான ஓட்டல்களே திறக்கப்பட்டன.

சென்னை,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்தநிலையில் ஜூன் 8-ந்தேதி (நேற்று) முதல் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளில் அமர்ந்து உணவு சாப்பிடலாம் என்றும், டீக்கடைகளில் இடைவெளி விட்டு டீ குடித்து செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது. இந்த வழிகாட்டு முறைகளை பின்பற்றியே ஓட்டல்களில் உணவு வழங்கப்படவேண்டும் என்று உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் தமிழகம் முழுவதும் அரசு அனுமதியுடன் ஓட்டல்கள் நேற்று செயல்பட தொடங்கின. சென்னையிலும் நேற்று ஓட்டல்களில் அமர்ந்து உணவு சாப்பிடும் நடைமுறை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. அதேபோல சோப்பு மற்றும் சானிடைசர் கொண்டு கைகளை நன்றாக சுத்தம் செய்த பின்னரே வாடிக்கையாளர்கள் ஓட்டல் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

உணவகங்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே வாடிக்கையாளர்கள் அமருவதற்கு வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மேஜைக்கும் இடையே குறைந்தபட்சம் 1 மீட்டர் இடைவெளி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. நாற்காலிகளும் இடைவெளி விட்டு போடப்பட்டிருந்தது. உப்பு, ஊறுகாய், மிளகுதூள் போல ஒவ்வொரு மேஜையிலும் கிருமிநாசினி டப்பாவும் வைக்கப்பட்டிருந்தது. ஏ.சி. எந்திரம் பயன்படுத்தப்படவில்லை. இதனால் உணவகங்களில் ராட்சத மின்விசிறிகள் பயன்படுத்தப்பட்டன.

உணவகங்களில் ஊழியர்கள் அனைவரும் முககவசம் மற்றும் கையுறை அணிந்திருந்தனர். வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு விட்டு சென்ற பின்னர் மேஜை மற்றும் நாற்காலிகளை கிருமிநாசினி மூலம் ஊழியர்கள் சுத்தம் செய்தனர். அதேபோல ஓட்டல்களில் உள்ள கழிவறைகளையும் அடிக்கடி சுத்தம் செய்யப்பட்டன. இவ்வாறு அரசின் வழிகாட்டு முறைகள் தீவிரமாக நேற்று உணவகங்களில் பின்பற்றப்பட்டன. ‘இது தங்களுக்கு மாறுபட்ட அனுபவமாக இருந்தது‘ எனவும் வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

அரசு அனுமதி அளித்தபோதிலும் சென்னையில் நேற்று 30 சதவீதத்துக்கும் குறைவான கடைகளிலேயே இந்த முறை பின்பற்றப்பட்டது. பெரும்பாலான உணவகங்களில் வழக்கம்போலவே பார்சல் முறையில் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

அதேவேளை உணவகங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா? அரிசி, காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் முறையாக கழுவி சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறதா? ஊழியர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கிறார்களா? என்பது குறித்து தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறையும் களமிறங்கியது. சென்னை தியாகராயகரில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஏ.சதாசிவம் தலைமையிலான குழுவினர் கடை கடையாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளையும் அதிகாரிகள் குழு அப்போது எடுத்துரைத்தனர்.

இதேபோல நகரின் பல்வேறு இடங்களிலும் உணவகங்களில் பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Next Story