75 நாட்களுக்கு பிறகு குமரியில் ஓட்டல்கள் திறப்பு சமூக இடைவெளியுடன் உணவருந்திய வாடிக்கையாளர்கள்
குமரி மாவட்டத்தில் 75 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள் திறக்கப்பட்டன. இங்கு சமூக இடைவெளியுடன் வாடிக்கையாளர்கள் உணவருந்தினர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் 75 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள் திறக்கப்பட்டன. இங்கு சமூக இடைவெளியுடன் வாடிக்கையாளர்கள் உணவருந்தினர்.
பார்சல் வழங்க உத்தரவு
கொரோனா நோய் பரவலை தடுக்க 5-வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்டன. உணவு விடுதிகளில் பார்சல் வழங்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. நேற்று முதல் உணவு விடுதிகளில் அமர்ந்து உணவருந்த அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி கடந்த 75 நாட்களுக்கு பிறகு நேற்று பெரும்பாலான ஓட்டல்கள் திறக்கப்பட்டு இருந்தன. அவற்றில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்ந்து உணவருந்தினர். 4 நபர்கள் அமரும் மேஜைகளில் இருநபர்களும். 2 பேர் அமரும் மேஜைகளில் ஒருவரும் அமர்ந்து உணவருந்தினர்.
பணியாளர்கள் பற்றாக்குறை
ஓட்டல்களுக்கு வரும் நபர்கள் கைகளை சுத்தம் செய்வதற்கு வசதியாக சோப்பு திரவம் வைக்கப்பட்டு இருந்தது. ஓட்டல்களுக்கு வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிந்து வந்தனர். சில ஓட்டல்களில் முக கவசம் அணியாமல் வந்தவர்களை ஓட்டல் உரிமையாளர்களும், நிர்வாகிகளும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தினர்.
பல பெரிய, பெரிய ஓட்டல்களில் பணிபுரிந்த வடமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலம் சென்றதாலும், பணியாளர்கள் இல்லாததாலும் நேற்றும் ஓட்டல்களில் பார்சல்கள் மட்டுமே வழங்கியதை காண முடிந்தது. சிறு, சிறு ஓட்டல்களில் குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு வாடிக்கையாளர்களை அமர வைத்து உணவு வழங்கினர்.
அதிகாரிகள் சோதனை
இதேபோல் டீக்கடைகளில் அமர்ந்து தேனீர் அருந்தவும் அனுமதி அளிக்கப்பட்டு இருந்ததால் டீக்கடைகளில் பொதுமக்கள் கூட்டத்தை காண முடிந்தது. அங்கும் சமூக இடைவெளியை கடைபிடித்து வாடிக்கையாளர்கள் அமர்ந்து டீ அருந்தினர். மேலும் வணிக வளாகங்களும் நேற்று திறக்கப்பட்டு இருந்தன. இதற்கிடையே நாகர்கோவில் மாநகராட்சி நகர்நல அதிகாரி கிங்சால் தலைமையில், சுகாதார ஆய்வாளர் பகவதியப்பன்பிள்ளை உள்ளிட்டோர் வடசேரி பகுதியில் திறக்கப்பட்டு இருந்த ஓட்டல்களில் கொரோனா விதிகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்தினர்.
மேலும் நாகர்கோவில் நகரம் முழுவதும் சுகாதார ஆய்வாளர்கள் 7 பேர் அந்தந்த பகுதிகளில் முக கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றவர்கள், நடந்து சென்றவர்கள் போன்றோருக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். இதனால் பெரும்பாலான சாலைகள் பரபரப்புடன் காட்சி அளித்தது.
Related Tags :
Next Story