கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்த விவகாரம்: அரசு ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் ; முதலமைச்சர் உத்தரவு


கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்த விவகாரம்: அரசு ஊழியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் ; முதலமைச்சர் உத்தரவு
x
தினத்தந்தி 9 Jun 2020 6:32 AM IST (Updated: 9 Jun 2020 6:32 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்தது தொடர்பான விவகாரத்தில் அரசு ஊழியர்கள் 3 பேரை பணியிடை நீக்கம் செய்து முதல்- அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.

புதுச்சேரி,

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்த 44 வயது மதிக்கத்தக்க ஒருவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். இவர் புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே கோபாலன் கடை என்ற பகுதியில் வசிக்கும் தனது மாமியார் வீட்டில் இருந்த மனைவி, மகனை அழைத்துச் செல்வதற்காக கடந்த வாரம் ஒரு காரில் வந்தார்.

வீட்டில் இருந்தபோது கடந்த 5-ந் தேதி காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து உறவினர்கள் அவரை கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவரது உடல் அரசு சார்பில் கோபாலன் கடை பகுதியில் உள்ள இடுகாட்டில் 12 அடி ஆழத்துக்கு குழி தோண்டி அடக்கம் செய்யப்பட்டது. கொரோனா காரணமாக அவரது இறுதிச்சடங்கில் உறவினர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

இந்தநிலையில் புதுச்சேரியில் உயிரிழந்த சென்னையை சேர்ந்த கொரோனா நோயாளியின் உடலை புதை குழியில் தள்ளி விடுவது போன்ற வீடியோ படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக புதுச்சேரி கலெக்டர் அருண் நடவடிக்கை மேற்கொண்டு வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், சுகாதார துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

இதைத்தொடர்ந்து உயிரிழந்த கொரோனா நோயாளியின் உடலை அடக்கம் செய்யும் பணியை மேற்கொண்ட 2 உள்ளாட்சி துறை ஊழியர்கள், சுகாதார துறை ஊழியர் ஒருவர் என 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வில்லியனூர் பகுதியில் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வந்து உயிரிழந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் உடலை அடக்கம் செய்தபோது அலட்சியம் காட்டியதாக பிரச்சினை எழுந்தது. இது வருத்தம் தரும் விஷயம். எந்த நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் உரிய மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? என்று நானும், அமைச்சர் நமச்சிவாயமும் கலந்துபேசி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம்.

அதன்படி உள்ளாட்சி துறையை சேர்ந்த வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலத்தில் பணியாற்றி வரும் பல்நோக்கு ஊழியர்களான (எம்.டி.எஸ்.) பெருமாள், அங்காளன் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி வார்டு அட்டெண்டர் மாயகிருஷ்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மேலும் விசாரிக்க கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார். அந்த விசாரணை அறிக்கை வந்ததும் யார் தவறு செய்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுப்போம். யாரையும் விட்டுவிட மாட்டோம். சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். இனிவரும் காலங்களில் இப்படி ஏற்படாமல் விதிமுறைப்படி செய்ய உத்தரவிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story