நிதி நிறுவனங்களில் பெற்ற கடனை செலுத்த 6 மாதம் காலஅவகாசம் ; மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு


நிதி நிறுவனங்களில் பெற்ற கடனை செலுத்த 6 மாதம் காலஅவகாசம் ; மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு
x
தினத்தந்தி 9 Jun 2020 8:21 AM IST (Updated: 9 Jun 2020 8:21 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கால் சரியாக வேலைக்கு போக முடியாத காரணத்தால் நிதி நிறுவனங்களில் பெற்ற கடனை திருப்பி செலுத்த 6 மாத காலம் அவகாசம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

நாமக்கல்,

திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து கலெக்டர் மெகராஜிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் எங்களின் குடும்ப அபிவிருத்திக்காக சிறிய நிதி நிறுவனங்களில் கடன் உதவி பெற்று மாதந்தோறும் தவறாமல் கடனை செலுத்தி வந்தோம். தற்போது கொரோனா வைரசின் காரணமாக நாங்கள் சரியாக வேலைக்கு போக முடியவில்லை. இதனால் மாத தவணை தொகையை செலுத்த முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. ஆனால் நிதி நிறுவனத்தினர் தற்போது கடனை கட்ட சொல்லி மிகவும் தொந்தரவு செய்து வருகின்றனர். எனவே தவணை தொகையை திருப்பி செலுத்திட 6 மாத காலம் அவகாசம் பெற்று தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

இதேபோல் பாச்சல் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் கலெக்டரிடம் விலையில்லா மடிக்கணினி வழங்கக்கோரி மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

நாங்கள் பாச்சல் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-18-ம் கல்வி ஆண்டில் பிளஸ்-2 படித்தோம். எங்கள் 43 பேருக்கும் இதுவரை அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை. தலைமை ஆசிரியரிடம் சென்று கேட்டால் அரசிடம் இருந்து உத்தரவு வரவில்லை என்கிறார். எனவே எங்களுக்கு விலையில்லா மடிக்கணினி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

நாட்டுப்புற கிராமிய கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது :-

கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவது இல்லை. இதேபோல் கோவில்களும் மூடப்பட்டு உள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இசை கலைஞர்கள், நாதஸ்வர கலைஞர்கள் , தவில் கலைஞர்கள் உள்ளிட்ட நாட்டுப்புற கலைஞர்கள் வருமானம் இன்றி தவித்து வருகிறோம். எனவே ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கி நாட்டுப்புற கலைஞர்களின் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர். 

Next Story