மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தவர் படுகொலை கட்டிலிலேயே வெட்டிச்சாய்த்து 5 பேர் கும்பல் வெறிச்செயல்
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த நபர் படுகொலை செய்யப்பட்டார். கட்டிலில் படுத்து இருந்த அவரை சரமாரியாக வெட்டிச்சாய்த்துவிட்டு தப்பிய 5 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.
மதுரை,
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த நபர் படுகொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி
மதுரை கரும்பாலை பி.டி.காலனி பகுதியை சேர்ந்தவர், முருகன் (வயது 40). கூலி தொழிலாளி. இவர் மீது மதுரை நகரின் பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட இவர், சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். சில வாரங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி அவரது கை மற்றும் கால் செயல் இழந்ததை தொடர்ந்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர், அண்ணாநகர் பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் 101-வது வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவருடன் மேலும் சிலரும் அந்த வார்டில் சிகிச்சையில் இருந்தனர்.
5 பேர் கும்பல்
இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கும்பல், தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் வெளிப்பகுதியில் நிறுத்திவிட்டு 101-வது வார்டை நோக்கி வந்தனர். மேலும் தங்களது கைகளில் கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் வைத்திருந்தனர்.
101-வது வார்டில் இருந்த காவலாளி அவர்களை தடுக்க முற்பட்டார். அப்போது அவரை மிரட்டிய அந்த கும்பல், அங்கு கட்டிலில் படுத்திருந்த முருகனை நோக்கி சென்றனர். பின்னர் அந்த கும்பல் தங்கள் கைகளில் வைத்திருந்த ஆயுதங்களால் படுக்கையில் படுத்திருந்த முருகனை சரமாரியாக வெட்டினர். இதில் அவரது கை, கால், நெஞ்சு, கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் வெட்டு விழுந்தது. மேலும் இதனை தடுக்க வந்தவர்களையும், அரிவாளை காட்டி மிரட்டினர்.
அலறியடித்து ஓட்டம்
இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியில் இருந்த சக நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தங்கி இருந்தவர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் என அனைவரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதனை தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதற்கிடையே ரத்த வெள்ளத்தில் துடி துடித்துக் கொண்டிருந்த முருகனுக்கு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தனர். இருப்பினும் அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
விசாரணை
இதுகுறித்து தகவலறிந்த பெரிய ஆஸ்பத்திரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது போல், மதுரை மாநகர உதவி கமிஷனர் கார்த்திக் தலைமையிலான போலீஸ் அதிகாரிகளும் வந்து விசாரணை நடத்தினர். மேலும் நடந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.
அரசு ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் மூலம் போலீசார் தங்களது விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.
இதற்கிடையே முருகனின் மனைவி நாகலட்சுமி மதிச்சியம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை அரங்கேறியதாகவும், இதில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த அருண்பாண்டி, விக்னேஸ்வரன், கரண் ராஜ் உள்ளிட்ட சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
3 பேரை பிடித்து விசாரணை
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், “கொலை செய்யப்பட்ட முருகனுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் முருகன் தரப்பை சேர்ந்தவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை கொலை செய்ததாகவும், அதற்குப் பழிக்குப் பழியாக இந்த கொலை சம்பவம் நடந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியை கட்டிலிலேயே வெட்டிக் கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வெளியாட்களை வெளியே அனுப்பிய போலீசார்
முருகன் கொலை தொடர்பாக போலீசார் அங்கிருந்த நோயாளிகளிடமும், நோயாளிகளுடன் தங்கியிருந்தவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தினர். இதுபோல் நோயாளிகளுடன் தங்கிருந்தவர்களை போலீசார் வெளியே அனுப்பி வைத்தனர். தேவையின்றி வெளியாட்கள் யாரும் உள்ளே வராத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இதனால் வெளியே அனுப்பப்பட்ட மக்கள் பெரிய ஆஸ்பத்திரியின் பிரதான சாலையில் நின்று கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் பல்வேறு சோதனைகளுக்குப் பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தேவையின்றி தங்கியிருந்தவர்களை போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனாலும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.
நோட்டமிட்ட கொலையாளிகள்
கொலை செய்யப்பட்ட முருகன் கடந்த 5-ந் தேதி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில் யார், யார் இருக்கிறார்கள் என்பது குறித்து கொலையாளிகளில் சிலர் ஏற்கனவே நோட்டமிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து முருகனுடன் தங்கியிருந்தவர்கள் அந்த வார்டு காவலாளியிடம் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் தேவையின்றி யாரையும் வார்டுக்குள் அனுமதிக்க வேண்டாம் எனவும், முருகனை பார்க்க யார் வந்தாலும் உள்ளேவிட வேண்டாம் எனவும் அந்த காவலாளியிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கிடையேதான் தற்போது இந்த படுகொலை சம்பவம் அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story