சேலம் மாவட்டத்தில் தங்கும் விடுதிகளை திறக்க தடை நீட்டிப்பு ; கலெக்டர் ராமன் அறிவிப்பு


சேலம் மாவட்டத்தில் தங்கும் விடுதிகளை திறக்க தடை நீட்டிப்பு ; கலெக்டர் ராமன் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Jun 2020 3:29 AM GMT (Updated: 9 Jun 2020 3:29 AM GMT)

சேலம் மாவட்டத்தில் தங்கும் விடுதிகளை திறக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ராமன் அறிவித்துள்ளார்.

சேலம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. இதன்படி நேற்று முதல் ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் தங்கும் விடுதிகளை திறக்கக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சேலம் மாவட்ட உணவகங்களில் தனிநபர் இடைவெளி 6 அடி பின்பற்றப்பட வேண்டும். உணவகங்களின் பணியாளர்கள் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யவேண்டும். நோய் அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே பணிபுரிய அனுமதிக்க வேண்டும். குளிர்சாதனப்பெட்டிகளில் காய்கறிகள், சமைத்த உணவுகளை வைத்து பயன்படுத்தக்கூடாது. வாடிக்கையாளர்களுக்கும் வழங்கக்கூடாது. உணவகங்களில் குளிர்சாதன வசதிகள் இருந்தாலும் அவற்றை கட்டாயம் பயன்படுத்தக்கூடாது.

உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் உணவகத்திற்குள் நுழையும்போது உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். உணவு அருந்தும் நேரத்தை தவிர மற்ற நேரங்களிலும் முககவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கை கழுவும் இடத்தில் முறையாக சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு கைகளை நன்றாக கழுவ வேண்டும். ரசீது பெறவும், கட்டணம் செலுத்தவும் மின்னணு கட்டண பரிமாற்றம் செய்வது சிறந்தது.

உணவு பொருட்களை கையாளும் நபர்கள் பாதுகாப்பு உபகரணங்களான முககவசம், தலைகவசம், கையுறை, மேல் அங்கி மற்றும் காலணிகள் போன்றவற்றை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். பணியாளர்கள் பணியின்போது அடிக்கடி சோப்பு திரவம் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்வதோடு, கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தங்கும் விடுதிகள் உள்ளன. தற்போது உணவகங்கள் திறக்கத்தான் அனுமதிக்கப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகளை திறக்க அனுமதி இல்லை. எனவே தங்கும் விடுதிகளை திறப்பதற்கான தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள் அனைத்தும் அரசின் மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது. மீறி திறக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story