அப்துல்கலாம் பன்னாட்டு அறக்கட்டளை சார்பில் சுற்றுச்சூழல் தின இணைய தள கருத்தரங்கு


அப்துல்கலாம் பன்னாட்டு அறக்கட்டளை சார்பில்  சுற்றுச்சூழல் தின இணைய தள கருத்தரங்கு
x
தினத்தந்தி 9 Jun 2020 9:29 AM IST (Updated: 9 Jun 2020 9:29 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பன்னாட்டு அறக்கட்டளை சார்பில் இணையதள கருத்தரங்கு நடைபெற்றது.

ராமேசுவரம்,

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ராமேசுவரத்தில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பன்னாட்டு அறக்கட்டளை சார்பில் இணையதள கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சென்னை ஐ.ஐ.டி. மின்னியல் துறை பேராசிரியர் அசோக் ஜூன்ஜூன்வலா, மகேந்திரா எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகேஷ்பாபு, கியான் செயலாளர் அணில்குப்தா, ஹுண்டாய் மோட்டார் நிறுவனத்தின் இந்திய பிரிவு துணை தலைவர் டாட்டா, சல்காம்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சசிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். முன்னதாக அனைவரையும் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் சேக் சலீம், சேக்தாவூத் ஆகியோர் வரவேற்று பேசினர். இதில் டாக்டர் அப்துல்கலாமின் விஷன் 2020 திட்டங்களுடன் புதைபடிம எரிபொருளை சார்ந்திருப்பதை குறைத்து சூரிய மற்றும் புதுப்பிக்கத்தக்க பசுமை ஆற்றல் ஆகியவற்றின் கட்டுமானங்களை தகுந்த தரத்துடன் உருவாக்குதல், 5 சதவீத புதுப்பிக்கத்தக்க ஆற்றலை 28 சதவீதமாக உயர்த்தவும், 75 சதவீதமாக உள்ள புதைபடிம ஆற்றலின் அளவை 50 சதவீதமாக குறைக்கவும் விவாதிக்கப்பட்டது. அப்போது பேராசிரியர் பேசியதாவது:- இந்தியாவில் மின் மற்றும் சூரிய ஆற்றலைக்கொண்டு வெகுதூரம் பயணிக்க முடியாது. இவற்றை முறையாக பயன்படுத்துதல், செயல்பாட்டு செலவு, ஆற்றலை சேமிப்பதற்கான செலவு ஆகியவற்றை சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும். மின் வாகனங்களில் பயண செலவு மற்றும் பராமரிப்பு செலவு குறைவு. சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பானது. எதிர்காலத்தில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு மின் வாகனங்களே சரியான தேர்வாக இருக்கும். ஏனெனில் அதன் செலவீனங்கள் மிக மிக குறைவு. பணத்தை சேமித்து இயற்கையை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story