திருச்சி அருகே பயங்கரம்: வாலிபர் ஓட, ஓட வெட்டிக்கொலை 10 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
திருச்சி அருகே வாலிபர் ஒருவர் ஓட, ஓட விரட்டிச் சென்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொள்ளிடம் டோல்கேட்,
திருச்சி அருகே வாலிபர் ஒருவர் ஓட, ஓட விரட்டிச் சென்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
முன்விரோதம்
திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள தாளக்குடி ஊராட்சி கீரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நல்லமுத்து. இவரது மகன் கார்த்திகேயன்(வயது 33). திருமணமான இவர், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இவர்மீது கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த காமராஜ் மகன்கள் ராஜதுரை (26), பரந்தாமன் (21) ஆகியோருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்த்திகேயனுக்கும், ராஜதுரைக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரைஒருவர் தாக்கிக்கொண்டனர். இதுதொடர்பாக, கொள்ளிடம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த தகராறால் ஆத்திரம் அடைந்த ராஜதுரை மற்றும் அவரது சகோதரர் பரந்தாமன் ஆகியோர் கார்த்திகேயனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.
வெட்டிக்கொலை
இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு ராஜதுரையும், பரந்தாமனும் தனது நண்பர்களான வாழக்கட்டை பகுதியை சேர்ந்த சசிகுமார் மகன் பிரவீன் (19), மேல வாளாடியை சேர்ந்த வெங்கடேஷ் (23), பிரசாந்த்(25), தந்தாங்கோரை பகுதியை சேர்ந்த பிரபு மகன் பிரதீப்(21) உள்ளிட்ட சிலரை வரவழைத்தனர். பின்னர் அனைவரும் மது குடித்தனர். அப்போது கார்த்திகேயனை கொலை செய்ய திட்டம் தீட்டிய அவர்கள் ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்துக்கொண்டு கும்பலாக கார்த்திகேயன் வீட்டிற்கு சென்றனர்.
அங்கு அவர் தனியாக தூங்கிக்கொண்டிருப்பதை அறிந்த அவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று தாக்க முயன்றனர். உடனே, சுதாரித்துக்கொண்ட கார்த்திகேயன் அவர்களிடமிருந்து தப்பி அருகில் உள்ள வீட்டுக்குள் சென்று ஒளிந்து கொண்டார். இதனை தட்டிக்கேட்ட கார்த்திகேயனின் சகோதரர் செல்வகுமாரை அந்த கும்பல் மிரட்டியது. பின்னர், கார்த்திகேயனை வெளியே இழுத்து வந்து வெட்ட முயன்றனர். அவர் தப்பி ஓடவே, அவரை ஓட, ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் கார்த்திகேயன் கீழே விழுந்தார். பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.
அருகில் உள்ளவர்கள் கார்த்திகேயனை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
10 பேர் கும்பலுக்குவலைவீச்சு
இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், முன் விரோதம் காரணமாக ராஜதுரை, பரந்தாமன் உள்பட 10 பேர் கொண்ட கும்பல் இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த கொலை குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராஜதுரை, பரந்தாமன் உள்ளிட்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இதில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ மற்றும் சில ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story