கடலூரில், கொரோனாவுக்கு தொழிலாளி பலி; மாவட்டத்தில் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்வு


கடலூரில், கொரோனாவுக்கு தொழிலாளி பலி; மாவட்டத்தில் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்வு
x
தினத்தந்தி 9 Jun 2020 10:22 AM IST (Updated: 9 Jun 2020 10:22 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழிலாளி ஒருவர் நேற்று பலியானார். இதன் மூலம் மாவட்டத்தில் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

கடலூர்,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுக்க அரசுடன் மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. குறிப்பாக தற்போது கடலூர் நகரில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் வரை கடலூர் மாவட்டத்தில் 487 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 445 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். மற்றவர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடலூரை சேர்ந்த தொழிலாளி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். அது பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் சரவணா நகரை சேர்ந்தவர் 57 வயதுடைய தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பால் அவதியடைந்து வந்ததாக தெரிகிறது. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையே அவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதையடுத்து உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவரது உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பரிசோதனை முடிவு நேற்று முன்தினம் இரவு வந்தது. இதில் அந்த தொழிலாளிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த தொழிலாளியின் உடல், மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவரும், கடலூர் தண்டபாணி நகரை சேர்ந்த முதியவர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story