ஓட்டல்கள் திறப்பு: 50 சதவீத இருக்கைகளில் அமர்ந்து பொதுமக்கள் உணவு சாப்பிட்டனர்


ஓட்டல்கள் திறப்பு: 50 சதவீத இருக்கைகளில் அமர்ந்து பொதுமக்கள் உணவு சாப்பிட்டனர்
x
தினத்தந்தி 9 Jun 2020 11:01 AM IST (Updated: 9 Jun 2020 11:01 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு தளர்வையொட்டி திறக்கப்பட்ட ஓட்டல்களில், 50 சதவீத இருக்கைகளில் அமர்ந்து பொதுமக்கள் உணவு சாப்பிட்டனர்.

கரூர், 

ஊரடங்கு தளர்வையொட்டி திறக்கப்பட்ட ஓட்டல்களில், 50 சதவீத இருக்கைகளில் அமர்ந்து பொதுமக்கள் உணவு சாப்பிட்டனர்.

கொரோனா தடுப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்தநிலையில் ஜூன் 8-ந்தேதி (நேற்று) முதல் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளில் அமர்ந்து உணவு சாப்பிடலாம் என்றும், டீக்கடைகளில் இடைவெளி விட்டு, டீ குடித்து செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது. இந்த வழிகாட்டு முறைகளை பின்பற்றியே உணவு வழங்கப்படவேண்டும் என்று ஓட்டல் உரிமையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

50 சதவீதம் பேர்

கரூர் நகரில் பஸ் நிலையம், கோவைரோடு, வையாபுரிநகர், தாந்தோணிமலை, காந்திகிராமம், பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் 50 சதவீதம் பேர் அமர்ந்து உணவு சாப்பிடுவதற்கு போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன்படி உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முதலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர் சோப்பு மற்றும் சானிடைசர் கொண்டு கைகளை நன்றாக சுத்தம் செய்த பின்னரே வாடிக்கையாளர்கள் ஓட்டல் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

முக கவசம் மற்றும் கையுறை

ஓட்டல்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே வாடிக்கையாளர்கள் அமர்வதற்கு வைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் கொரோனா பயத்தில், பெரும்பாலான ஓட்டல்களில் மிக குறைந்த அளவிலான வாடிக்கையாளர்களே அமர்ந்து சாப்பிட்டு சென்றனர். உணவகங்களில் ஊழியர்கள் அனைவரும் முக கவசம் மற்றும் கையுறை அணிந்திருந்தனர்.

வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு விட்டு சென்ற பின்னர் மேஜை மற்றும் நாற்காலிகளை கிருமிநாசினி மூலம் ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.

Next Story