‘மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்ததால் கணவரை கொன்றேன்’ கைதான மனைவி வாக்குமூலம்


‘மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்ததால் கணவரை கொன்றேன்’ கைதான மனைவி வாக்குமூலம்
x
தினத்தந்தி 9 Jun 2020 11:06 AM IST (Updated: 9 Jun 2020 11:06 AM IST)
t-max-icont-min-icon

‘மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்ததால் கணவரை கொன்றேன்‘ என்று கைதான மனைவி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நகலூர் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 44). செங்கல் சூளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருடைய மனைவி மதனமேரி (40). பிரான்சிசுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

குடிக்க பணம் கேட்டு அடிக்கடி மதனமேரியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை மனைவி கண்டித்துள்ளார். இதனால் பிரான்சிஸ் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் பிரான்சிஸ், மதனமேரியின் வீட்டுக்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் மதனமேரி ஆத்திரம் அடைந்து அருகில் இருந்த கல்லை எடுத்து பிரான்சிசை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார் இதில் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனமேரியை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் மதனமேரி நகலூர் கிராம நிர்வாக அதிகாரி தமிழரசன் முன்பு நேற்று சரண் அடைந்தார். அவரை கிராம நிர்வாக அதிகாரி அந்தியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி மதனமேரியை கைது செய்தனர். பின்னர் அவர் போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம் விவரம் வருமாறு:-

எனக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் மூத்த மகள் கல்லூரியில் படித்து வருகிறார். மற்ற 2 மகள்களும், மகனும் பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்கள். எனது கணவர் பிரான்சிஸ் வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார்.

இதனால் எனக்கு குடும்பத்தை நடத்தவும், பிள்ளைகளை படிக்க வைக்கவும் மிகவும் சிரமமாக இருந்தது. இதன் காரணமாக கூலி வேலைக்கு சென்றேன். அதில் கிடைக்கும் வருமானத்தில் பிள்ளைகளையும் படிக்க வைத்து, குடும்பத்தை நடத்தி வருகிறேன். ஆனால் எனது கணவர் அந்த பணத்தையும் என்னிடம் இருந்து பிடுங்கி மது குடித்து வந்து தகராறில் ஈடுபடுவார்.

சம்பவத்தன்றும் அதேபோல் வீட்டுக்கு வந்து என்னிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அங்கிருந்த கல்லை எடுத்து அவர் மீது வீசினேன். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கொலை நடந்ததும் நான் அங்கிருந்து தப்பித்து ஓடி தலைமறைவாக இருந்து வந்தேன். இந்த நிலையில் போலீசார் என்னை தேடுவதை அறிந்து கிராம நிர்வாக அதிகாரி முன்பு சரண் அடைந்தேன்.

இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் மதனமேரி கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட மதனமேரி பவானி ஜே.எம். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story