செங்கோட்டையில் மது குடிக்க பணம் தராததால் தாய் அடித்துக் கொலை மகன் கைது


செங்கோட்டையில்  மது குடிக்க பணம் தராததால் தாய் அடித்துக் கொலை மகன் கைது
x
தினத்தந்தி 10 Jun 2020 4:00 AM IST (Updated: 10 Jun 2020 12:31 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் மது குடிக்க பணம் தராததால் தாய் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மகனை போலீசார் கைது செய்தனர்.

செங்கோட்டை,

தென்காசி மாவட்டம் செங்கோட்டை குளத்து முக்கு கே.சி.ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி இசக்கியம்மாள் (வயது 70). கணவரை இழந்த இவர் கூடையில் மீன்களை வைத்து தெருத்தெருவாக கொண்டு சென்று விற்பனை செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலம் சரி இல்லாததால் மீன் வியாபாரத்திற்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

இவருடன் அவரது இளைய மகன் மாரியப்பன் (38) என்பவரும் வீட்டில் ஒன்றாக இருந்து வருகிறார். மாரியப்பன் ஏற்கனவே மனைவியை பிரிந்து சரியாக வேலைக்கு போகாமல் உள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதற்காக தாயிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று இசக்கியம்மாள் கூறினார்.

இனால் ஆத்திரம் அடைந்த மாரியப்பன் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து தாயின் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த இசக்கியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மாரியப்பன் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். இசக்கியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, தப்பி ஓடிய மாரியப்பனை கைது செய்தனர்.

மது குடிக்க பணம் தராததால் தாயை மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் செங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story